கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம்…புகார் வந்தால் கடும் நடவடிக்கை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்..!!

Author: Rajesh
5 May 2022, 3:36 pm
Quick Share

சென்னை: கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில் சமீபத்தில் தஞ்சையை சேர்ந்த மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணையை சுட்டிக்காட்டி குமரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக செய்திகள் வந்ததன் அடிப்படையில் அதனை தடுக்க உரிய விதிகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்றும் மாநில அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும் எனவும், மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆனந்தி, மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பாக ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவிந்திரன் மனு தாரர் குறிப்பிட்ட கன்னியாகுமரி, திருப்பூர் சம்பவங்களை தவிர வேறு எந்த இடத்திலும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக எந்த புகாரும் இல்லை எனவும் கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் எந்த பள்ளியில் எந்த தேதியில் மதமாற்றம் நடந்தது என்ற எந்தவொரு விவரங்கள் இல்லாமலும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இது விசாரணைக்கு உகந்ததல்ல என கூறிய தமிழக அரசு வழக்கறிஞர் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் கட்டாய மதமாற்றத்தை தடுப்பதற்கான வழிகாட்டு விதிமுறைகளை அரசு ஏன் தொடங்க கூடாது என்றும் இதில் தமிழக அரசுக்கு என்ன சிரமம் உள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவது உரிமையாக இருந்தால் கூட அது மதமாற்றம் செய்வது என்பது உரிமை அல்ல என்று தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.

Views: - 614

0

0