சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Author: Babu Lakshmanan
7 September 2022, 8:09 pm
Quick Share

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது ;- முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌, வெளியுறவுத்‌ துறை அமைச்சர்‌ எஸ்‌. ஜெய்சங்கருக்கு இன்று (7-9-2022) எழுதியுள்ள கடிதத்தில்‌, கடந்த 9 மாதங்களில்‌ இலங்கைக்‌ கடற்படையினரால்‌ கைது செய்யப்பட்ட 150 தமிழக மீனவர்களை தூதரக நடவடிக்கைகள்‌ மூலம்‌ விடுவிக்க உதவியமைக்காக தனது நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொண்டதோடு, கடந்த 6-9-2022 அன்று புதுச்சேரியைச்‌ சேர்ந்த விசைப்படகில்‌ மயிலாடுதுறை மாவட்டத்தைச்‌ சேர்ந்த 5 மீனவர்கள்‌ உள்ளிட்ட 12 இந்திய மீனவர்கள்‌ இலங்கைக்‌ கடற்படையினரால்‌ கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்‌ துறை அமைச்சர்‌ அவர்களின்‌ கவனத்தை ஈர்ப்பதாகத்‌ தெரிவித்துள்ளார்‌.

தற்போதைய நிலவரப்படி, இலங்கை அரசின்‌ வசம்‌ 23 மீனவர்களும்‌, 95 மீன்பிடிப்‌ படகுகளும்‌ உள்ளதாகக்‌ குறிப்பிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, இலங்கைக்‌ கடற்படையினரால்‌ கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும்‌, அவர்களது மீன்பிடிப்‌ படகுகளையும்‌ விரைவில்‌ விடுவிப்பதற்குத்‌ தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 158

0

0