மதமாற்றம் தமிழகத்திலே வேகமாக பரவும் விஷச்செடி : மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்… அண்ணாமலை கொடுத்த வாய்ஸ்..!!
Author: Babu Lakshmanan20 January 2022, 5:28 pm
மதமாறச் சொல்லிக் கட்டாயப்படுத்தியால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன் முருகானந்தம் (45). இவரது முதல் மனைவி கனிமொழியின் மகள் ஸ்வேதா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கனிமொழி 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மாணவி மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலை பள்ளியில் 8 வகுப்பு சேர்த்து தற்போது பிளஸ் 2 படித்து வந்தார். அவர் அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
கடந்த 9ஆம் தேதி பூச்சி மருந்தை குடித்து வாந்தி எடுத்துள்ளார். மாணவி தனக்கு வயிற்று வலி என்று கூறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். மறுதினம் 10ம் தேதி மாணவியின் தந்தைக்கு தெரியப்படுத்தியதால் அவர் வந்து மாணவியை அழைத்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் சனிக்கிழமை 15ஆம் தேதி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்களிடம் மாணவி, தான் பூச்சிமருந்து குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து பைல்களையும் பார்க்கச் சொன்னதாகவும், தான் பிளஸ் டூ படிப்பதால் தன்னால் படிக்க முடியவில்லை என்ற காரணத்தினால் பூச்சி மருந்தை குடித்ததாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் வழக்குப்பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரி (62) கைது செய்யப்பட்டார். அந்த மாணவி உயிரிழப்பதற்கு முன்பாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாணவியின் தற்கொலைக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்த நிலையில், மதமாற்றம் தமிழகத்திலே வேகமாக பரவுகின்ற ஒரு விஷச்செடி என்றும், இதனை தடுக்க தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஏழை விவசாயி மகள், வயது 17, அரியலூர் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் நன்றாகப் படிக்கும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. இவரை மதம் மாறச் சொல்லி, பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பள்ளியின் ஹாஸ்டலில் தங்கி இருந்த மாணவி, மரணத்திற்கு முன், பேசிய வீடியோ பதிவு, மனதைப் பதறவைக்கும்.
நடுநிலையான விசாரணை நடைபெற்று, தவறு செய்தவர், கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும். மதமாற்றம் – தமிழகத்திலே வேகமாக பரவுகின்ற ஒரு விஷச்செடி. ஏழை மக்களை துன்புறுத்தி இது போன்ற காரியங்கள் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு மாநில அரசு கவனம் கொடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்! மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
0
0