பாஜகவுடன் இன்றைக்கும் கூட்டணி இல்லை, என்றைக்கும் இல்லை : அதிமுக அறிவிப்பு.. அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2023, 5:40 pm
ADMK Bjp - Updatenews360
Quick Share

பாஜகவுடன் இன்றைக்கும் கூட்டணி இல்லை, என்றைக்கும் இல்லை : அதிமுக அறிவிப்பு.. அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு!!

தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக இடையே உச்சகட்ட மோதல் நிலவி வரும் நிலையில், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பாஜக – அதிமுக இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இன்று ஆலோசனை கூட்டத்தில் முக்கியமான முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிமுகவில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்றும் மற்றொரு தரப்பின் கூட்டணியை முறிக்க வேண்டும் எனவும் மாறுபட்ட கருத்து இருப்பதால், இறுதி கட்ட முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருந்தார்.

எனவே, கூட்டணி முறிவு அல்லது கூட்டணி தொடர பாஜகவுக்கு நிபந்தனை விதிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், பாஜக கூட்டணி வேண்டாம் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியதாக கூறப்பட்டது. பாஜக கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக தொடர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில், பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துகளை கூறியதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து, இபிஎஸ் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்றது.

இந்த நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது என அறிவிக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் தலைமையிலான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேபி முனுசாமி, பாஜக உடனான கூட்டணி முறிந்து விட்டதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது. 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப்பெரிய கட்சி அதிமுக தான் என்பது குறிப்பிடத்தக்கது

Views: - 251

0

0