பொய்யை பரப்பிய திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா… குடியரசு தின விழா ஊர்வலத்தில் குளறுபடி… ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த பாஜக..!!

Author: Babu Lakshmanan
26 January 2022, 7:41 pm
Quick Share

சென்னை : குடியரசு தின விழா அணிவகுப்பு தொடர்பாக திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா வெளியிட்ட பதிவுக்கு பாஜக ஊடகப் பிரிவு தலைவர் ஆதாரத்துடன் வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக அரசு சார்பில் வ.உ.சி, பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்தி முன்மொழிவு ஒன்று மத்திய பாதுகாப்புத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சில காரணங்களுக்காக இந்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது.

இதனால், தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு உண்டானது. தமிழக சுதந்திர போராட்ட தியாகிகளை மத்திய அரசு அவமதித்து விட்டதாக, பல்வேறு தரப்பினர் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் முடிவு செய்வதில்லை என்றும், பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் குழுவே இதனை தீர்மானிப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னையில் நடைபெற்ற தமிழக அரசின் குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தில், டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தியின் அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் உருவ சிலைகள் பொரித்த வாகனங்களையும் அணிவகுப்பில் இடம்பெறச் செய்து தமிழக அரசு பதிலடி கொடுத்தது.

இதனிடையே, குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டதாக ஒரு ஊர்தியின் புகைப்படத்தை மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா பகிர்ந்து, இது எந்த மாநிலத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்..? என கேள்வி எழுப்பியிருந்தார். அவரது இந்தப் பதிவை பகிர்ந்து ஏராளமான கிண்டல் பதிவுகளை திமுகவினர் பதிவிட்டு வந்தனர். அதேவேளையில், பாஜகவினரும் அதற்கு பதிலடி கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜாவின் பதிவை பகிர்ந்த பாஜக ஊடகப் பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், 2013ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் நடத்தப்பட்ட குடியரசு தின விழாவில் பங்கேற்ற கர்நாடக மாநில அலங்கார ஊர்தி குறித்த புகைப்படத்தை திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா தற்போது பொய்யாக பரப்பி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அது தொடர்பான செய்தியின் ஸ்கீரின்ஷாட்டையும் அவர் பகிர்ந்துள்ளார். இதனை வைத்து திமுக எம்எல்ஏவை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், பழனிவேல் தியாகராஜனுக்கு பதிலாக திமுக ஐடி விங் செயலாளர் பதவியை ஏற்றது இதுபோன்ற தவறான தகவல்களை டிஆர்பி ராஜா பகிர்ந்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், திமுகவின் முக்கியப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட டிஆபி ராஜா, இதுபோன்று புகைப்படத்தின் தன்மை தெரியாமல், அதனை சமூக வலைதளங்களில் பகிர்வது இனியும் தொடர்ந்தால், அவரது பொறுப்பிற்கு பெரிய பிரச்சனை எழக் கூட வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 2658

0

0