காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கார்… உயிருக்கு போராடிய 6 பேர் : உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய காவலர்… வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2022, 4:19 pm
Resuce From Flood - Updatenews360
Quick Share

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்த 6 பேரை உயிரை பணயம் வைத்து பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்ட காவல்துறையினர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வள்ளிபட்டி பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

அப்போது வெள்ளோடு பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டு சண்முகம், பாலசுப்ரமணி, பாலகிருஷ்ணன், பாண்டியன், செல்வராஜ், மணிகுமார் ஆகிய ஆறு பேர் ஒரு காரில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். தரைப்பாலத்தில் ஓடிய காட்டாற்று வெள்ளத்தை பொருட்படுத்தாமல் தரைப் பாலத்தை கடக்கமுயன்றனர்.

அப்போது பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து எச்சரித்தும், போதையில் இருந்தவர்கள் செவி சாய்க்காமல் காரை ஓட்டிச்சென்றபோது கார் தரைப்பாலத்திலிருந்து தண்ணீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.

இதனால் காரில் இருந்தவர்கள் பயத்தில் அலறினர். அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த தடுப்புக்கம்பி ஒன்றில் கார் சிக்கியதால், வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படாமல் கார் அங்கேயே நின்றது.

அதனைத் தொடர்ந்து காரில் இருந்தவர்கள் காரில் இருந்து வெளியே வந்து காரின் மீது ஏறி அமர்ந்து உயிர்தப்பினர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கூம்புர் காவல் சிறப்பு சாய்பு ஆய்வாளர் சந்திரசேகர், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ராஜபாண்டி வினோத்குமார் மற்றும் ஊர்மக்கள் சேர்ந்து ஒரு டிராக்டரை கொண்டு சென்று கயிறு கட்டி தங்கள் உயிரை பணயம் வைத்து காட்டாற்று வெள்ளத்தில் இறங்கி 6 பேரையும் பத்திரமாக காப்பாற்றி வெளியே கொண்டுவந்தனர்.

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்து 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை எற்படுத்தியது.

Views: - 402

0

0