ஓரங்கட்டப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு: இயக்குநர் சிவாவின் வேறு பிளான்!

20 January 2021, 3:39 pm
Quick Share

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இயக்குநர் சிவா திடீரென்று அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

தர்பார் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார். அண்ணாத்த படத்தில், ரஜினிகாந்த் உடன் இணைந்து, மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜாக்கி ஷெராஃப், பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி, ஜார்ஜ் மரியான் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் ரமோஜி பிலிம் சிட்டியில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பின் போது படக்குழுவினர் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு சென்னை திரும்பிய அவர் ஓய்வில் இருந்து வருகிறார். அரசியலுக்கு வருவதாக அறிவித்ததை தனது உடல்நிலையை காரணம் காட்டி திரும்ப பெற்றார். அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வேறு கட்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.

மேலும், உடல்நிலை காரணமாகவும், தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல் காரணமாக வரும் மே மாதம் வரை ரஜினிகாந்த் ஓய்வெடுக்க இருக்கிறார். இதனால், அண்ணாத்த படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ளப்போவதில்லை. அண்ணாத்த படத்தின் ஹைதராபாத் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையிலேயே மீதியுள்ள படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதுவும், மே அல்லது ஜூன், ஜூலை மாதங்களில் தான் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னதாக இதுவரை எடுத்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை எடிட்டிங் செய்து இயக்குநர் சிவா முடித்துள்ளார். இன்னும் 5 மாத காலம் சும்மாவே இருக்க முடியாது என்பதால், அடுத்து தான் இயக்கும் சூர்யா படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டாராம். விரைவில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை முடித்துவிட்டு சூர்யா படத்தின் படப்பிடிப்புகளை தொடங்க இருக்கிறாராம்.

அதற்குள்ளாக அண்ணாத்த படத்தையும் முடித்துவிட திட்டமிட்டுள்ளாராம். சிவா – சூர்யா இணையும் படத்தை கே இ ஞானவேல்ராஜா தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0