சக்ரா படத்தை வெளியிட இடைக்கால தடை!

16 February 2021, 6:16 pm
Quick Share

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். கடந்த 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் படம் வெளியாகியிருந்தது. இந்தப் படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது சக்ரா, துப்பறிவாளன், எனிமி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். எம்.எஸ் ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் படம் சக்ரா. இந்தப் படத்தில் விஷாலுடன் இணைந்து ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், கே.ஆர்.விஜயா, ரவிகாந்த், மனோபாலா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மாஸ்டர் படம் திரைக்கு வந்ததைத் தொடர்ந்து ஒவ்வொரு படமாக திரையரங்கிற்கு வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், வரும் 19 ஆம் தேதி விஷால் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள சக்ரா படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவி என்ற தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


அதில், அவர் கூறியிருப்பதாவது: விஷால் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள சக்ரா படத்தை தயாரிப்பதற்கு இயக்குநர் எம் எஸ் ஆனந்தன் தன்னிடம் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால், அந்தப் படத்தை விஷாலை வைத்து தயாரித்து, வெளியிடவும் தயாராகிவிட்டார். இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் நடந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்களது தரப்பிடம் காப்புரிமை இருப்பதால், சக்ரா படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, சக்ரா பட த்தை வெளியிடுவதற்கு நீதிபதி இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவிட்டார். அதோடு, இது தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். ஆனால், வரும் 19 ஆம் தேதி தான் சக்ரா படம் வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், விஷாலின் சக்ரா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தப் படம் 12 ஆம் தேதி வெளியாக இருந்து அதன் பிறகு 19ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, மறுபடியும் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Views: - 7

0

0