கோப்ரா ஷூட்டிங்கை முடித்த ஸ்ரீநிதி ஷெட்டி!
8 February 2021, 4:04 pmசியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் தனது காட்சிகள் அனைத்தையும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி முடித்துக் கொடுத்துள்ளார்.
விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கடாரம் கொண்டான். இந்தப் படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. கடாரம் கொண்டான் படத்தைத் தொடர்ந்து, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக கோப்ரா படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பில் சியான் விக்ரம் கலந்து கொண்டார். ஹைதராபாத்தில் நடந்து வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிவதற்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்த பிறகே மீண்டும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பில் விக்ரம் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில், இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தனது காட்சிகளை நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் பாவனா மேனன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், சியான் விக்ரமுக்கு மனைவியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. கோப்ரா படத்தில் கிட்டத்தட்ட 15 விதமான கதாபாத்திரங்களில் விக்ரம் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் துருக்கி நாட்டின் இன்டர் போல் அதிகாரியாக நடித்து வருகிறார்.
மேலும், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், கனிகா, ரேணுகா, ரோபோ ஷங்கர், பூவையார், டிஎஸ்ஆர், கே எஸ் ரவிக்குமார், மிர்ணாளினி ரவி, பத்மப்ரியா ஜானகிராமன், ரோஷன் மேத்யூ என்று ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த தும்பி துள்ளல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கோப்ரா படம் உருவாகி வருகிறது.
0
0