ரிஸ்க் எடுத்த ரஜினிகாந்த்: ஹைதராபாத் ஷூட்டிங் தேவைதானா?

13 April 2021, 8:43 am
Quick Share


ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ள அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் உள்பட பலர் நடிக்கின்றனர். ஹைதராபாத்தில் நடந்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக, ரஜினிகாந்தும், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.


அதில், அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர், வீடு திரும்பினார். அதன் பிறகு ஓய்வில் இருந்து வந்தார். இதன் காரணமாக ஹைதராபாத் படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழுவினர் ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்தனர்.


இதற்கிடையில், தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந் த து. இதில், வாக்களித்த கையோடு ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றுள்ளார். கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குப் பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆம், விடுபட்ட காட்சிகளை மீண்டும் ஹைதராபாத்திலேயே படமாக்கி வருகின்றனர்.


தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தனது உடல்நிலையை கூட பொருட்படுத்தாமல், ரஜினிகாந்த் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றது பெரும் பரபரப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிஸ்டம் சரியில்ல, எல்லாத்தையும் மாத்தனும் என்று கூறிக்கொண்டிருந்த ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசியலுக்கு வரமுடியவில்லை என்று பள்ளி மாணவர்கள் லீவ் லெட்டர் எழுதுவது போல் அறிக்கை வெளியிட்டிருந்தார்.


ஆனால், இப்போது இந்த கொரோனாவின் இக்கட்டான சூழ்நிலையிலும், அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றிருப்பது ரிஸ்க் எடுத்திருப்பது போன்று தெரிகிறது. எனினும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் தான் படக்குழுவினர் படப்பிடிப்பை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.


ஹைதராபாத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த், சூரி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அண்ணாத்த படப்பிடிப்பில், விரைவில் நயன்தாராவும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Views: - 20

0

0