ஏற்கனவே சொன்னது பொய்யா? அண்ணாத்த ஷூட்டிங் எப்போது?

25 February 2021, 12:52 pm
Quick Share

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 15 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் இணைந்து நடித்து வரும் படம் அண்ணாத்த. ஆதலால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைக்கிறார்.


அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் உள்பட பலர் நடிக்கின்றனர். ஹைதராபாத்தில் நடந்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ரஜினிகாந்தும், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

அதில், அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி ரஜினிகாந்த் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.

ஹைதராபாத் படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழுவினர் ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தல் முடிந்த பிறகே அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

அதுமட்டுமல்லாமல், ரஜினிகாந்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஹைதராபாத்தில் எடுக்கப்பட இருக்கும் காட்சிகளை சென்னையிலேயே படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.


இந்த நிலையில், தற்போது அண்ணாத்த பட த்தின் படப்பிடிப்பு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் மார்ச் 15 ஆம் தேதி முதல் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
இந்த தகவல் தான் உண்மை என்றால், ஏற்கனவே வெளியான தகவல் பொய்யா என்று கேள்வி எழுகிறது.

இது ஒரு புறம் இருக்க, அண்ணாத்த படத்தில் தளபதி விஜய் தனது குரலில் ஒரு பாடல் பாட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அண்ணாத்த படம் திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 11

0

0