₹68 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்..! உகாண்டா நாட்டைச் சேர்ந்த இருவர் டெல்லியில் கைது..!

24 January 2021, 5:56 pm
IGI_Drug_Arrest_UpdateNews360
Quick Share

68 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு உகாண்டா நாட்டவர்கள் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

முன்னதாக சந்தேகத்தின் பேரில், இன்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் என்டெபேவிலிருந்து தோஹா வழியாக அவர்கள் வந்த பின்னர் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை சோதனை செய்தபோது, பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் கண்டறியப்பட்டது.

“இந்த பொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, முதன்முதலில் இது 68 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் எனத் தெரிய வந்துள்ளது” என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பயணிகளின் உடைமைகளை ஆய்வு செய்தபோது, போதைப்பொருள் என்று சந்தேகிக்கப்படும் 9.8 கிலோ (தோராயமாக) வெள்ளை தூள் பொருளைக் கொண்ட 51 பைகளை அதிகாரிகள் மீட்டனர் என்று சுங்கத்துறை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் (என்.டி.பி.எஸ்) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் உகாண்டா நாட்டைச் சேர்ந்த இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் சுங்கத்துறை, இது யாருக்காக கடத்தி வரப்பட்டது எனும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

Views: - 0

0

0