25 ஆண்டுகளுக்கு பின் பெண் வேட்பாளர்: கேரள சட்டசபை தேர்தலில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் போட்டி..!!

Author: Aarthi Sivakumar
13 March 2021, 12:49 pm
kerala lady candi - updatenews360
Quick Share

கோழிக்கோடு: 25 ஆண்டுகளுக்கு பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கேரள சட்டசபை தேர்தலில் பெண் வேட்பாளர் போட்டியிட உள்ளார்.

கேரள சட்டசபைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 14 மாவட்டங்களை கொண்ட 140 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்டசபைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும். வருகிற ஜூன் 1ந்தேதியுடன் 14வது கேரள சட்டசபைக்கான பதவி காலம் நிறைவடைகிறது.

15வது சட்டசபைக்கான தேர்தலில் 2 கோடியே 67 லட்சத்து 88 ஆயிரத்து 268 வாக்காளர்கள் ஓட்டு பதிவு செய்து வேட்பாளர்களை தேர்வு செய்கின்றனர். இதில், ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகளில் ஒன்றான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கேரள சட்டசபை தேர்தலில் 25 ஆண்டுகளுக்கு பின் பெண் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அக்கட்சி போட்டியிடும் 27 தொகுதிகளில் 25 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கோழிக்கோடு தெற்கு தொகுதிக்கான வேட்பாளராக நூர்பினா ரஷீத் என்ற பெண் போட்டியிடுகிறார். கடந்த 1996ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக பெண் வேட்பாளர் ஒருவரை அக்கட்சி தேர்தலில் நிறுத்தியுள்ளது. இதுபற்றி அவர் கூறும்பொழுது,

கட்சியின் முடிவால் மகிழ்ச்சி அடைந்து உள்ளேன். சமூகத்திற்கு சேவை செய்து தொடர்ந்து ஜனநாயக காவலாளியாக இருப்பேன். பெண்கள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ளவர்களின் விவகாரங்களை பேச சட்டசபையில் பெண் உறுப்பினர்கள் தேவை. சமூகத்தில் பெண்கள் அதிகம் முன்னுக்கு வரவேண்டும் என்பது இருபாலரின் எதிர்பார்ப்பு. எங்களுடைய கட்சி தலைமையின் முடிவால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறியுள்ளார்.

கடந்த 1996ம் ஆண்டு கோழிக்கோடு தொகுதியில் அக்கட்சியின் மகளிர் லீக்கின் முன்னாள் தலைவரான கமருன்னிசா அன்வர் என்ற பெண் போட்டியிட்டார்.

Views: - 78

0

0