லக்னோ வந்தடைந்தார் பிரதமர் மோடி : முக்கிய பகுதிகளில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு
5 August 2020, 11:17 amலக்னோ : அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி லக்னோ வந்தடைந்தார்.
சர்ச்சைக்குரியதாக இருந்து வந்த 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது. இதற்காக, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், ‘ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்னும் பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளை முடுக்கி விட்டது.
அதன்படி, இன்று ராமர் கோவிலுக்கான பூமிபூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடத்த முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் தலைமையில் நடக்கும் இந்த விழாவில், கொரோனா வைரஸ் காரணமாக 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ராமர் கோவில் பூமி பூஜைக்கான சடங்குகள் அயோத்தியில் நேற்று முன்தினம் முதலே தொடங்கி நடந்து வருகின்றன. இறுதி நிகழ்வாக, இன்று பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது.
இந்த பூமிபூஜை விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை 9.35 மணியளவில் டெல்லியில் இருந்து விமானப்படைக்குச் சொந்தமான சிறப்பு விமானம் மூலம் லக்னோ வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தியில் உள்ள சாகேத் கல்லூரி மைதானத்தில் இறங்குகிறார். பின்னர், பூமி பூஜையில் கலந்து கொள்ள இருக்கிறார்.