குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்..! பிரதமர் மோடி இரங்கல்..!

29 October 2020, 1:12 pm
keshubhai_patel_updatenews360
Quick Share

குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 92.

மார்பு வலி இருப்பதாக அவர் கூறியதையடுத்து, கேசுபாய் படேல் அகமதாபாத்தில் உள்ள ஸ்டெர்லிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மாரடைப்பு காரணமாக அவர் காலமானார்.

கேசுபாய் படேல் 1995 மற்றும் 1998 முதல் 2001 வரை குஜராத் முதல்வராக பணியாற்றினார். குஜராத் சட்டமன்ற உறுப்பினராக ஆறு முறை பதவி வகித்த கேசுபாய் படேல் 2012’ல் பாஜகவை விட்டு வெளியேறி தனது சொந்த அரசியல் கட்சியான குஜராத் பரிவர்த்தன் கட்சியை தொடங்கினார். 

2012 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் அவருடைய கட்சி மோசமாக தோற்றுப் போனது. இதையடுத்து மகாகுஜராத் ஜனதா கட்சி இணைந்ததன் மூலம் அவருடைய கட்சி விரிவடைந்தது. ஆனால் பிப்ரவரி 2014’இல் மீண்டும் பாரதிய ஜனதாவுடன் அவரது கட்சி இணைக்கப்பட்டது.

படேல் 2012’ல் விசாவதர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக 2014’இல் ராஜினாமா செய்தார்.

கேசுபாய் படேல் 1928’இல் ஜுனகத் மாவட்டத்தின் விசாவதர் நகரில் பிறந்தார். 1945’ஆம் ஆண்டில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்) சேர்ந்தார். பின்னர் 1960’களில் ஒரு ஸ்தாபக உறுப்பினராக ஜனசங்கத்தில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

இந்நிலையில் பிரதமர் மோடி கேசுபாய் படேலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எங்கள் அன்பான மற்றும் மரியாதைக்குரிய கேசுபாய் காலமானார். நான் மிகுந்த வேதனையும் வருத்தமும் அடைகிறேன்.

அவர் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் கவனித்துக்கொண்ட ஒரு சிறந்த தலைவராக இருந்தார். அவரது வாழ்க்கை குஜராத்தின் முன்னேற்றம் மற்றும் ஒவ்வொரு குஜராத்தியின் அதிகாரம் ஆகியவற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்டது.” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 19

0

0

1 thought on “குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்..! பிரதமர் மோடி இரங்கல்..!

Comments are closed.