அம்னஸ்டி இன்டெர்நேஷனலுக்குத் தடை..! பிண்ணனி இது தானா..? மத்திய அரசு விளக்கம்..!

29 September 2020, 7:32 pm
Amnesty_International_Updatenews360
Quick Share

அம்னஸ்டி இன்டர்நேஷனல் தனது இந்திய செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டுள்ள நிலையில், அந்த அமைப்பு எடுத்த நிலைப்பாடு மற்றும் அறிக்கைகள் துரதிர்ஷ்டவசமானவை, மிகைப்படுத்தப்பட்டவை மற்றும் உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளன என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் (எஃப்.சி.ஆர்.ஏ) கீழ் 2000’ஆம் ஆண்டில் ஒரு முறை மட்டுமே அனுமதி பெற்றுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியது.

அத்தகைய ஒப்புதல் பெற அமைப்பிற்கு தகுதி இல்லை என்று கண்டறியப்பட்டதால் வெளிநாட்டு நிதி பெற அடுத்தடுத்த அரசாங்கங்களால் தடை விதிக்கப்பட்டது.

இந்தியாவில் மனித உரிமைக்கான பணிகளைத் தொடர்வதாகக் கூறிக்கொண்டு, வெளிநாட்டு நன்கொடைகளால் நிதியளிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்நாட்டு அரசியல் விவாதங்களில் தலையிட இந்தியா அனுமதிக்காது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தியது. “இந்த சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்தும். இது அம்னஸ்டி இன்டர்நேஷனலுக்கும் பொருந்தும்” என்று அது கூறியது.

“இருப்பினும், எஃப்.சி.ஆர்.ஏ விதிமுறைகளைத் தவிர்ப்பதற்காக, அம்னஸ்டி யுகே இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட நான்கு நிறுவனங்களுக்கு பெரிய அளவிலான பணத்தை அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) என வகைப்படுத்தியதன் மூலம் அனுப்பியது. கணிசமான அளவு வெளிநாட்டு பணம் அம்னஸ்டி இந்தியாவுக்கு இவ்வாறு அனுப்பியுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் இது நடைபெற்றுள்ளது. இந்த மோசடி மூலம் பணத்தை மாற்றியமைப்பது தற்போதுள்ள சட்ட விதிகளுக்கு முரணானது.” என்று உள்துறை அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இன்று முன்னதாக, அம்னஸ்டி இன்டர்நேஷனல் அரசாங்கத்தின் சூனிய வேட்டை என மேற்கோளிட்டு தனது இந்தியா நடவடிக்கைகளை நிறுத்தப்போவதாக அறிவித்தது. அரசாங்கம் தனது வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டிய மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல், டெல்லி கலவரம் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் குறித்து வெளிப்படைத்தன்மையைக் கோரியதன் விளைவாக அரசாங்க நிறுவனங்களால் துன்புறுத்தபடுகிறோம் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Views: - 0 View

0

0