அடுத்த காலாண்டில் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் இந்திய பொருளாதாரம்..! அமித் ஷா நம்பிக்கை..!

30 November 2020, 4:31 pm
Amit_Shah_UpdateNews360
Quick Share

தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகள் பொருளாதாரம் எதிர்மறை வளர்ச்சியை சந்தித்த பின்னர், அடுத்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மீண்டும் முன்னேற்றப் பாதைக்குத் திரும்பும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்தார். 

பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார மீட்சிக்கு கடுமையாக உழைத்தார். மேலும் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட நெருக்கடிக்குப் பின்னர் ஒரு நிதி ஊக்கத் தொகுப்பையும் அறிவித்திருந்தார். இதன் மூலம் தற்போது பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்புகிறது என அமித் ஷா, வீடியோ கான்பெரன்ஸ் மூலம் அகமதாபாத்தில் இரண்டு மேம்பாலங்களை திறந்து வைத்த பின்னர் கூறினார்.

“பிரதமராக, நரேந்திரபாய் கொரோனா தொற்றுநோய்களின் நேரத்தை கொள்கை வகுப்பைக் காட்சிப்படுத்த பயன்படுத்தினார். பொருளாதாரத்தில் அதன் நீண்டகால தாக்கத்தை மனதில் வைத்து பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்” என்று அமித் ஷா கூறினார்.

ஒரு நொடி கூட வீணாக்காமல், விவசாயத் துறை, மின்சாரம், தொழில்துறை கொள்கை போன்ற பல துறைகளில் சீர்திருத்தங்களைச் செய்து, வளர்ச்சியின் வேகத்தைத் தக்கவைக்க ஒரு அமைப்பை மோடி உருவாக்கினார் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நோக்கத்திற்காக, ஏழை மக்களின் நலனுக்காக ரூ 20 லட்சம் கோடி நிதி ஊக்கத் தொகுப்பை மோடி அறிமுகப்படுத்தினார் என்றும் இது பொருளாதாரத்திற்கு வேகத்தை அளித்ததாகவும் அமித் ஷா கூறினார்.

“இதன் விளைவாக, சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, நாம் ஆறு சதவீதம் மட்டுமே பின்தங்கியுள்ளோம். அடுத்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி நேர்மறையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று அமித் ஷா கூறினார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு பொருளாதார நடவடிக்கைகளைத் தாக்கியதால், மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 23.9 சதவீதம் சுருங்கிய நிலையில் இரண்டாம் காலாண்டில் சற்று முன்னேறி இந்த சுருக்கம் சுமார் 6 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0