நேபாளம் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம்..! மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவி..!

19 January 2021, 8:16 pm
Corona_Vaccine_UpdateNews360
Quick Share

பூட்டான், மாலத்தீவு, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு நாளை முதல் மானிய உதவியின் கீழ் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், அண்டை மற்றும் முக்கிய நட்பு நாடுகளிடமிருந்து இந்தியா தயாரிக்கும் தடுப்பூசிகளை வழங்க பல கோரிக்கைகளை பெற்றுள்ளதாகக் கூறியுள்ளது.

“இந்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், உலக மக்களுக்காக இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோக திறனைப் பயன்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கு இணங்க, பூட்டான், மாலத்தீவு, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு மானிய உதவியின் கீழ் ஜனவரி 20 முதல் தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கும்.” என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மொரீஷியஸுக்கு தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளை உறுதிப்படுத்த காத்திருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா ஏற்கனவே ஒரு பெரிய கொரோனா வைரஸ் தடுப்பூசி இயக்கத்தை நாடு தழுவிய அளவில் மேற்கொண்டுள்ளது. இதன் கீழ் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் நாடு முழுவதும் உள்ள முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றன.

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்ட் சீரம் நிறுவனத்தாலும், கோவாக்சின் பாரத் பயோடெக் நிறுவனத்தாலும் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பங்களாதேஷ் சுகாதார அமைச்சர் ஜாஹித் மாலெக், நாளை பரிசாக இந்தியாவில் இருந்து கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு மில்லியன் டோஸைப் பெற உள்ளதாகக் கூறி இதை உறுதிப்படுத்தியுள்ளார்.  

Views: - 0

0

0