மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்த பெண் தொண்டர்..! மக்கள் கொந்தளிப்பு..!

12 September 2020, 1:44 pm
Asha_Kerala_Suicide_Communist_UpdateNews360
Quick Share

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் தொண்டர் ஒருவர் திருவனந்தபுரத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். மேலும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு கடிதத்தில், கட்சியின் உள்ளூர் தலைவர்கள் சிலரால் சித்திரவதைக்கு ஆளானதாக பெண் தொண்டர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே இது போன்ற தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு புகாரை எதிர்கொண்டுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்தின் கிராமப்புறத்தில் உள்ள பரஸ்ஸலாவைச் சேர்ந்த ஸ்ரீகுமாரின் மனைவியான 41 வயதான ஆஷா, வியாழக்கிழமை இரவு உடியங்குலங்கராவில் உள்ள கட்சியின் உள்ளூர் அலுவலகத்தைத் திறப்பதற்காக சிபிஎம் கையகப்படுத்திய கட்டிடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். 

அங்கிருந்து ஆஷா எழுதிய ஒரு தற்கொலைக் குறிப்பு மீட்கப்பட்டுள்ளது. அதில் “உள்ளூர் கம்யூனிஸ்ட் தலைவர்களான ராஜன், ஜாய் ஆகிய இருவரும் தன்னை தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகின்றனர். இது குறித்து கட்சியின் உயர்மட்ட தலைமைக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்ட கடும் மன உளைச்சலின் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து உள்ளூர் மக்களில் ஒரு பகுதியினர் அந்த இடத்தில் ஒரு போராட்டத்தை நடத்தி நேற்று காலை சாலையை மறித்தனர். இந்த மரணத்தில் ஒரு மர்மம் இருப்பதாகக் கூறி விரிவான விசாரணைக்கு கோரினர். கடந்த இரண்டு நாட்களாக அவர் காணவில்லை என்றும் ஊர்மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த சமயத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள காங்கிரஸ் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கட்சியில் உள்ள பெண்கள், தலைவர்களால் தொடர்ந்து சித்திரவதைக்கு ஆளாகி தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து உயர்மட்டத் தலைவர்களுக்கு புகார் தெரிவித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இது குறித்து டிஜிபி தலைமையில் நேர்மையான விசாரணை நடப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திலேயே கட்சகியின் பெண் தொண்டர் ஒருவர் தற்கொலை செய்திருப்பது கேரள மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0