இன்ஸ்டாவில் பகிர்ந்த போட்டோ… இளைஞர் அடித்துக்கொலை : காவல்நிலையம் முன்பு உடலை வீசிய அதிர்ச்சி சம்பவம்.. நடுநடுங்க வைத்த கொலை!!

Author: Babu Lakshmanan
19 January 2022, 12:00 pm
Quick Share

கேரளாவில் இரு ரவுடி கும்பலுக்கு இடையேயான மோதலில் 19 வயது இளைஞன் கடத்தி அடித்துக்கொல்லப்பட்டு உடல் போலீஸ் நிலையம் முன் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா திரைப்படங்களைப் போன்று கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் பல ரவுடிகள் குழுக்கள், குழுக்கள் பிரிந்து, அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருவது வழக்கம். அதில், பாஷா, ஆண்டனியைப் போல, ஜோமன் மற்றும் சூரியன் ஆகிய இரு ரவுடி கும்பலுக்கு இடையே அடிக்கடி சண்டை நிகழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த இரு கும்பல் இடையே எப்போதும் முன்விரோதம் இருந்து கொண்டே இருக்கிறது.

இதில், ரவுடி சூரியனை கொலை செய்ய வேண்டும் என்று மற்றொரு ரவுடியான ஜோமன் பல மாதங்களாக திட்டம் தீட்டி வந்துள்ளான். இதையறிந்த சூரியன் தலைமறைவாகவே இருந்துள்ளார்.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரவுடி சூரியன் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில், இடுக்கி மாவட்டம் விமலகிரி பகுதியை சேர்ந்த ஷான் பாபு என்ற 19 வயது இளைஞனுடன் ரவுடி சூரியனுடன் நிற்கும் புகைப்படத்தை பார்த்துள்ளார் ஜோமன். இதனால், ஷான் பாபுவை பிடித்தால், சூரியனை தூக்கி விடலாம் என்ற எண்ணம் அவனுள் வந்துள்ளது.

கடந்த 16-ம் தேதி இரவு ஷான் பாபுவை ஆட்டோவில் ரவுடி ஜோமன் கடத்திச்சென்று, சூரியன் குறித்து கேட்டுள்ளார். இதனிடையே, ஷான் பாபு கடத்தப்பட்டது தொடர்பாக அவரது பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், ரவுடி சூரியன் இருக்கும் இடம் தனக்கு தெரியாது என ஷான் பாபு எவ்வளவோ கூறியும், அதனை நம்ப மறுத்த ஜோமன், மது போதையில் அவரை கொடூரமாகக் கொலை செய்துள்ளான். பின்னர், மேலும், கொல்லப்பட்ட ஷான் பாபுவின் உடலை தனது தோளில் சுமந்து வந்த ரவுடி ஜோமன், அதை கோட்டயம் கிழக்கு போலீஸ் நிலையம் முன் மறுநாள் துக்கி வீசியுள்ளார். அதோடு, அங்கு நின்று கொண்டு, நான் கொலை செய்து விட்டேன், எனக் கத்தியபடி, போதையில் அங்கிருந்து மெதுவாக நடந்து சென்றுள்ளான்.

அந்த சத்தத்தைக் கேட்ட போலீசார் போலீஸ் நிலையத்திற்கு வெளியே சென்று பார்த்த போது, இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போகினர். அதோடு, கொலை செய்த ஜோமன் அங்கு தள்ளாடியபடி நடந்து சென்றதையும் கவனித்தனர். உடனே ஜோமனை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

பின்னர், மேலும், போலீஸ் நிலையம் முன் வீசப்பட்ட உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில், கொல்லப்பட்ட நபர் ஷான் பாபு என்பது உறுதியானது. எதிர்தரப்பு ரவுடி கும்பலை சேர்ந்த நபரை தீர்த்துக்கட்ட எண்ணிய ரவுடி எதிரியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த புகைப்படத்தில் இடம்பெற்ற இளைஞரை கடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடிகள் இடையேயான கோஷ்டி மோதலில் இளைஞர் கொலை செய்யப்பட்டு உடல் போலீஸ் நிலையம் முன் வீசப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 455

0

0