புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு இலவச உணவு தானியங்கள் வழங்கும் யோசனை இல்லை: மத்திய அரசு அறிவிப்பு..!!

11 May 2021, 8:25 am
Food_Grains_UpdateNews360
Quick Share

புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு இலவச உணவு தானியங்கள் வழங்கும் யோசனை இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 6 லட்சத்து 40 ஆயிரம் டன் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அதுபோல், இந்த ஆண்டும் வழங்கப்படுமா என்று மத்திய உணவுத்துறை செயலாளர் சுதன்சு பாண்டே அளித்த பேட்டி ஒன்றில் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு சுதன்சு பாண்டே கூறியதாவது, புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை கடந்த ஆண்டைப்போல் பெரிதாக இல்லை. தற்போது, தேசிய அளவிலான ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை. அந்தந்த மாநில அளவில்தான் ஊரடங்கு உள்ளது. பீதி உண்டாக்கும் அளவுக்கு நிலைமை இல்லை.

சொந்த கிராமங்களுக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள், ரேஷன் கார்டுகள் மூலமாக உணவு தானியங்களை பெற்று வருகிறார்கள். எனவே, இந்த ஆண்டு அவர்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் இல்லை. அதே சமயத்தில், பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின்கீழ், மே, ஜூன் மாதங்களுக்கு கூடுதலாக இலவச உணவு தானியம் வழங்கும் பணி தொடங்கி விட்டது. இத்திட்டத்தில், வழக்கமான அரிசி அளவுடன், ஒவ்வொரு பயனாளிக்கும் கூடுதலாக தலா 15 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது.

80 கோடி காா்டுதாரர்கள் பலன் அடைவார்கள். மே மாதத்துக்கு ஒதுக்கப்பட்ட 39 லட்சம் டன் உணவு தானியங்களில், இதுவரை 1 லட்சம் டன் உணவு தானியங்கள் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு உள்ளன. மாநிலங்கள் தங்களுக்கான மாதாந்திர ஒதுக்கீட்டில் 40 சதவீதத்தை எடுத்துச்சென்றுள்ளன. எனவே, உணவு தானிய வினியோகம் சுமுகமாக நடைபெறும் என்று எதிர்பாா்க்கிறோம்.

வெளிச்சந்தையில் அரிசி, கோதுமை போதிய அளவில் கிடைப்பதற்காக, அவற்றை மொத்த நுகர்வோருக்கு குறைந்த விலையில் மத்திய அரசு விற்று வருகிறது. இந்த திட்டத்தாலும், அன்னயோஜனா திட்டத்தாலும் வெளிச்சந்தையில் அரிசி, கோதுமை விலை உயர வாய்ப்பில்லை. இந்த ஆண்டு, உணவு தானியங்களை சேமித்து வைப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினாா்.

Views: - 108

0

0