தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹25 லட்சம் இழப்பீடு..! சீரம் நிறுவனம் அறிவிப்பு..!

22 January 2021, 10:44 am
Serum_Institute_Fire_UpdateNews360
Quick Share

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அனைவருமே கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர். 
ஐந்து மாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் நடந்து கொண்டிருக்கும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் அங்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து தீயணைப்பு படையினரால் ஐவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. மேலும் 9 பேர் அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தீயணைப்பு படை அதிகாரிகள் வந்ததும் அந்த மாடியில் பணிபுரிந்த ஐந்து பேரின் உடல்கள் முற்றிலுமாக எரிந்த நிலையில் மட்டுமே மீட்க முடிந்தது. அவர்களில் இருவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், இரண்டு புனேவைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் பீகாரைச் சேர்ந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், புனேவில் உள்ள நிறுவனத்தின் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த நபர்களின் குடும்பங்களுக்கு வழக்கமாக வழங்கும் இழப்பீட்டுத் தொகையைத் தவிர, மேலும் ஒவ்வொரு குடும்பங்களுக்கு தலா ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவரும் எம்.டி.யுமான சைரஸ் எஸ் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

“சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் இன்று நம் அனைவருக்கும் மிகவும் வருத்தமளிக்கும் நாள். வருந்தத்தக்க வகையில், மஞ்சாரியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள எங்கள்நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் இழப்புகள் ஏற்பட்டன” என்று பூனவல்லா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

“நாங்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  விதிமுறைகளின் படி வழங்கப்படும் தொகையைத் தவிர, உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்குவோம். இந்த துன்பகரமான காலங்களில் அனைவருக்கும் அவர்களின் கவலைகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று பூனவல்லா கூறினார்.

முன்னதாக ஒரு ட்வீட்டில், அவரது மகனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதார் பூனவல்லா, “எங்களுக்கு சில துன்பகரமான புதுப்பிப்புகள் கிடைத்துள்ளன. விசாரணையில், துரதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் சில உயிர் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதை நாங்கள் அறிந்து கொண்டோம். நாங்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கல்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தற்செயலான சூழல்களை சமாளிக்க பல உற்பத்தி கட்டிடங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் கோவிஷீல்ட் உற்பத்தியில் எந்த இழப்பும் ஏற்படாது என்று ஆதார் பூனவல்லா மேலும் கூறினார்.

இதற்கிடையே, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே புனேவின் மஞ்சரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தை இன்று பார்வையிட உள்ளதாக மகாராஷ்டிரா அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Views: - 0

0

0