ரூ.7,000 கோடி கடனில் தத்தளித்த காஃபி டே… ஒரே ஆண்டில் மீட்டெடுத்த மாளவிகா ஹெக்டே: கணவனால் முடியாததை மனைவி சாதித்தது எப்படி..?

Author: Aarthi Sivakumar
11 January 2022, 4:17 pm
Quick Share

கஃபே காபி டே நிறுவனத்தின் சி.இ.ஓவான சித்தார்த்தாவின் மனைவி மாளவிகா ஹெக்டே பொறுப்பேற்றப் பிறகு கடனில் தத்தளித்த நிறுவனத்தை கரை சேர்த்து சாதித்து காட்டியுள்ளார்.

2019ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி மங்களூருவில் உள்ள நேத்ராவதி நதியில் விழுந்து கஃபே காபி டே நிறுவனத்தின் தலைவர் வி.ஜி.சித்தார்த்தா தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொழிலில் நஷ்டம், கோடிக்கணக்கில் கடன், வருமான வரித்துறையின் நெருக்கடி என பல்வேறு காரணங்களால் சூழ்ந்த சித்தார்த்தா தற்கொலை செய்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. சுமார் 7,000 கோடி கடனில் காஃபி டே நிறுவனத்தை சித்தார்த்தா விட்டுச் சென்ற பிறகு அந்நிறுவனமும் அதில் பணியாற்றும் ஊழியர்களும் என்ன நிலைக்கு ஆவார்கள் என பல்வேறு கேள்விகள் எழுந்தன.

ஆனால், அவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கஃபே காபி டேவின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார் சித்தார்த்தாவின் மனைவி மாளவிகா ஹெக்டே.

பொறுப்பேற்ற நாள் முதலே மிகவும் தொலைநோக்கு பார்வையோடு செயல்பட தொடங்கினார் மாளவிகா ஹெக்டே. அதன்படி நிறுவனத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்கள் அனைத்தும் சவால்களாக எடுத்துக் கொண்டு பணியாற்றியதன் விளைவாக மார்ச் 2020ம் ஆண்டின் நிதிநிலைப்படி CCDன் கடன் 2,909.95 கோடியாக குறைத்துக் காட்டியிருக்கிறார்.

அதற்கடுத்த படியாக 2021ன் மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 1,731 கோடி ரூபாயாக கஃபே காபி டே நிறுவனத்தின் கடன் குறைந்திருக்கிறது. சித்தார்த்தா மறைந்த போது 7000 கோடி ரூபாயாக இருந்த கடனை வெறும் இரண்டே ஆண்டுகளில் தனியொரு ஆளாக இருந்து சாதூர்யமாக பணியாற்றி 1700 கோடியாக குறைத்திருக்கிறார் மாளவிகா.

கணவரை பிரிந்த துயரம் ஒரு புறமும், மற்றொரு புறம் கோடிக்கணக்கான கடனில் நிறுவனமும் தத்தளித்து கொண்டிருக்கையில் மாளவிகா ஹெக்டேவின் துணிச்சலான நடவடிக்கையாலும் நிர்வாகத்திறனாலும் தற்போது CCD மீது இருந்த எதிர்மறையான விமர்சனங்கள் அனைத்தும் சுக்குநூறாகிப் போயிருக்கிறது.

கடனில் தத்தளித்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிற்கு மாளவிகா ஹெக்டே வருகையில் யாரெல்லாம் ஏளனம் செய்தார்களோ? யாரெல்லாம் அவரால் முடியாது என நினைத்தார்களோ? அவர்களது முன்னிலையில் துணிவுடன் முன்னேறிவரும் நிஜ சிங்கப்பெண்ணாக இன்று வலம் வருகிறார் மாளவிகா ஹெக்டே.

Views: - 585

0

0