“விவசாயத்தில் மாணவர்களின் பங்களிப்பு மிக அவசியமானது” : பிரதமர் மோடி உரை..!
29 August 2020, 3:56 pmவேளாண்துறையில் தன்னிறைவு அடைய மாணவர்களின் பங்களிப்பு மிக அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள ராணி லட்சுமி பாய் மத்திய வேளாண் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் நிர்வாக கட்டிடங்களை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கடந்த 2014 -2015ம் ஆண்டில் ராணி லட்சுமிபாய் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படிப்புகள் தொடங்கப்பட்டன. வேளாண்மை, தோட்டக்கலை, வனத்துறை தொடர்பான இளநிலை மற்றும் முதுகலை படிப்புகள் இங்கு அளிக்கப்படுகின்றன.
அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, விவசாயத்துறையில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டுமானால் அதற்கு மாணவர்களின் பங்களிப்பு மிக அவசியம் என குறிப்பிட்டார்.
மேலும், விவசாயிகள், சொட்டு நீர் பாசனம் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்த மாணவர்கள் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, டிரோன் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை விவசாயத்தில் பயன்படுத்த மாணவர்கள் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இனி வரும் காலங்களில் வேளாண் கல்வி பள்ளிப்பாடத்தில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரதமர் மோடி, இயற்கை வேளாண்மையை நோக்கி விவசாயிகள் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.