திருமணமாகாமல் கர்ப்பம் தரித்த மகள்..! ஆணவக் கொலை செய்த பெற்றோர்..!

1 November 2020, 12:16 pm
Death_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேசத்தில் 20 வயதுடைய ஒரு பெண்ணின் பெற்றோர், திருமணமாகாமலேயே தனது மகள் கர்ப்பமடைந்ததால் ஆணவக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தாய், தந்தை இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அடையாளம் தெரியாத ஒரு இளம் பெண்ணின் சடலம் அக்டோபர் 25’ஆம் தேதி பிரதாப்கர் மாவட்டம் அலபூர் அருகே ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டதாக நவாப்கஞ்ச் காவல்நிலைய அதிகாரி அகிலேஷ் பிரதாப் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில் கிஷுண்தாஸ்பூர் கிராமத்தில் வசிக்கும் கமலேஷ் குமார் யாதவின் தந்தை சடலத்தை அடையாளம் கண்டுள்ளார். தனது மகள் கொலை செய்யப்பட்டதாகவும், இது குறித்து போலீசில் புகாரும் அளித்துள்ளார்.

இதையடுத்து நவாப்கஞ்ச் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. எனினும், அந்த பெண் இறந்த நேரத்தில் கர்ப்பமாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கமலேஷ் குமார் யாதவ் மற்றும் அவரது மனைவி அனிதா தேவி ஆகியோரை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். விசாரணையின் போது, ​​இருவரும் அக்டோபர் 24’ஆம் தேதி, உடல்நிலை சரியில்லாத தங்கள் மகளை ஒரு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறினர்.

சோதனையில் மகள் ஆறு மாத கர்ப்பிணி என்பது தெரியவந்தது. கருக்கலைப்பு செய்வதற்காக ஒரு மருத்துவரைக் கண்டுபிடிக்க அவர்கள் முயன்றனர். ஆனால் அதில் வெற்றிபெற முடியவில்லை. இந்நிலையில் மகளின் கர்ப்பத்திற்கு காரணம் யார் எனக் கேட்டதற்கு மகள் உண்மையை சொல்ல மறுத்து விட்டார்.

பின்னர் பெற்றோர் கர்ப்பிணியான மகளை அலபூர் அருகே இரவில் ரயில் தண்டவாளத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்தனர். அவர்கள் ஒரு விபத்து அல்லது தற்கொலை செய்து கொள்வது போல் தோன்றுவதற்காக உடலை தண்டவாளத்தில் வீசியுள்ளனர்.

கொலை செய்வதற்கு பயன்படுத்திய கோடரியும் மீட்கப்பட்டுள்ளதாகவும், தம்பதியினர் உண்மையை ஒப்புக் கொண்டதால் சிறைக்கு அனுப்பப்பட்டதாகவும் காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார்.

Views: - 80

0

0

1 thought on “திருமணமாகாமல் கர்ப்பம் தரித்த மகள்..! ஆணவக் கொலை செய்த பெற்றோர்..!

Comments are closed.