மோசடி தேர்தல்: கோவையில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி…அதிமுக உட்பட 14 வேட்பாளர்கள் தர்ணா..!!

Author: Rajesh
22 February 2022, 12:50 pm
Quick Share

கோவை: தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிமுக வேட்பாளர் உட்பட 14 வேட்பாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் பதிவான வாக்குகள் ஜிசிடி கல்லூரியில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. திமுக வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. பல இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் 32வது வார்டு வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக அதிமுக, பாஜக உள்ளிட்ட 14 வேட்பாளர்கள் மற்று. கட்சி முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், ”32வது வார்டு சங்கனூர் திமுக வேட்பாளராக பாபு என்கிற பார்த்திபன் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளராக முருக பாபு, பாஜக வேட்பாளராக புவனேஷ் ஆகியோர் களம் கண்டனர். இந்த 32வது வார்டு வாக்கு எண்ணிக்கையின் போது திமுக கட்சியை சேர்ந்த வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.

இதுநாள் வரை இந்த வார்டில் திமுகவினர் வெற்றி பெற்றது கிடையாது. திமுக அலுவலகம் எப்போதும் பூட்டியே கிடக்கும். அந்த வார்டில் முழு பணிகளையும் அதிமுகவினரே செய்து வந்தோம். எங்கள் வெற்றிதான் பிரகாசமாக இருந்தது. ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முன்னிலை பெற்றுள்ளது. அங்கு 4 வாக்குப் பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளது.

எங்களது கையெழுத்து போலியாக உள்ளது. வரிசை எண்ணும் மாற்றப்பட்டுள்ளது. எனவே திமுகவினர் திட்டமிட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர். இதனைக்கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த வார்டில் மறுவாக்குபதிவு நடத்த வேண்டும். என்றனர்.

இந்த திடீர் தர்ணா போராட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் தர்ணாவில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி வெளியேற்றினர்.

Views: - 780

0

0