திருப்பூர் அருகே அடைத்து வைக்கபட்டிருந்த 19 பெண் கொத்தடிமைகள் மீட்பு : சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு!!

19 April 2021, 7:36 pm
19 womens Rescue -Updatenews360
Quick Share

திருப்பூர் : திருப்பூர் பனியன் நிறுவனத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கொத்தடிமைகளான 19 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, சொந்தமாநிலமான ஒடிசாவுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருப்பூர் தண்ணீர் பந்தல் காலனியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில், வடமாநில பெண் தொழிலாளர்கள் சிலர் கட்டாயப்படுத்தி அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோட்டாட்சியர் ஜெகநாதன் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் போலீஸார் விசாரித்தனர்.

அதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 19 இளம்பெண்கள் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால், அவர்களை நிறுவனம் அனுப்பி வைக்காமல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வருவாய்த்துறையினர் தலைமையில் போலீஸார் மீட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஒடிசா மாநிலத்துக்கு செல்லும் ரயிலில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட பெண் தொழிலாளர்கள், அனைவரும் 23 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்கள் என்பதும், சம்பந்தப்பட்ட பனியன் நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் தொழில் பயிற்சி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நிறுவனம் உரிய சம்பளம் கொடுக்காமலும், உடைமைகளை அறையில் பூட்டி வைத்திருந்தது தொடர்பாக ஒடிசா மாநில தலைமை செயலாளருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அவர் தமிழக தலைமை செயலாளரை தொடர்புகொண்டு, அதன்மூலம் மாவட்ட நிர்வாகத்துக்கு இந்த தகவல் கிடைத்து இவர்கள் மீட்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 19 பேரும் பத்திரமாக, ஒடிசா மாநிலத்துக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் அவர்களை கண்காணித்து, திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக 15 வேலம்பாளையம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 53

0

1