கடனை திருப்பிக் கேட்டவரின் குடும்பத்தினருக்கு விஷ மாத்திரை கொடுத்து கொலை…! நூதன முறையில் நாடகமாடி 2 பேர் கைது

Author: Udhayakumar Raman
27 June 2021, 11:09 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் கடனை கேட்டு தொந்தரவு செய்தவரின் குடும்பத்தினருக்கு விஷ மாத்திரை கொடுத்து மூவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள பெருமாள்மலை பகுதியில் கருப்பண்ணகவுண்டர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வந்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதாக கூறி கருப்பண்ணகவுண்டர், மல்லிகா, தீபா மற்றும் குப்பாள் ஆகிய நால்வருக்கும் மாத்திரை கொடுத்துள்ளார். மாத்திரை சாப்பிட சிறிது நேரத்தில் நால்வரும் மயக்கமடைந்ததை அடுத்து மகள் தீபாவின் கணவர் நால்வரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதில் மருத்துவமனை செல்லும் வழியிலே மல்லிகா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் தீபா மற்றும் குப்பாள் ஆகிய இருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய கருப்பண்ணகவுண்டரிடம் கல்யாணசுந்தரம் என்பவர் சுமார் 10 லட்ச ரூபாய் பெற்று திருப்பி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடனை கேட்டு வந்த கருப்பண்ண கவுண்டர் குடும்பத்தினருக்கு கல்லூரி மாணவர் சபரி என்பவர் மூலம் கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி பூச்சிமருந்து கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து டிஎஸ்பி செல்வராஜ் தலைமையிலான தனிப்படை இருவரையும் கைது செய்து மாத்திரை கொடுத்து கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை முயற்சி மற்றும் கொலை செய்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களிடம் இருந்து பூச்சிமாத்திரை மற்றும் இருச்சக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கொடுத்த கடனை கேட்ட நபரின் குடும்பத்தினர் மூவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 337

0

0