ஒன்றரை வயது குழந்தையை அழைத்துக் கொண்டு தோட்டத்துக்கு சென்ற விவசாயி : சோகத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2022, 5:14 pm
Tragedy Child Dead - Updatenews360
Quick Share

சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை கொப்பு வாய்க்கால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அக்கரை நெகமம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் இவருக்கு பேபி என்ற மனைவியும் தன்யஸ்ரீ என்ற‌ ஒன்றரை வயது மகளும் உள்ளனர்.

மோகன்ராஜ் அதே பகுதியில் தனக்கு சொந்தமான விளைநிலத்தில் சம்மங்கி பூ சாகுபடி செய்து வருகிறார். விவசாயி மோகன்ராஜ் தினந்தோறும் தன்னுடைய விளைநிலத்திற்கு நீர் பாய்ச்ச செல்லும் பொழுது தனது மகள் தன்யஸ்ரீயை உடன் அழைத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் இன்று மதியம் வழக்கம் போல் மகள் தன்ய ஸ்ரீயை அழைத்துக் கொண்டு விவசாயி மோகன்ராஜ் தனது விவசாய நிலத்துக்கு நீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது நேற்று சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழையின் காரணமாக விளை நிலத்தில் நீர் தேங்கி நிற்கவே மகள் தன்யஸ்ரீயை தோட்டத்தின் அருகே விளையாட விட்டுவிட்டு மோகன் தோட்டத்தில் தேங்கி இருந்த மழை நீரை அருகே உள்ள கொப்பு வாய்க்காலில் செல்லும்படி மடை திருப்பிக் கொண்டு இருந்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து திரும்பி பார்த்தபோது மகள் தண்ணீர் ஸ்ரீ காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார்.

இருப்பினும் மகள் தன்ய ஸ்ரீ கிடைக்காததால் சந்தேகமடைந்து அருகே உள்ள கொப்பு வாய்க்காலில் குழந்தை தவறி இருக்கலாம் என கருதி உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறை அவருக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கொப்பு வாய்க்காலில் குழந்தையை தேடி உள்ளனர். அப்போது சுமார் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் குழந்தை தன்யஸ்ரீ நீரில் கிடப்பதைக் கண்ட தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் குழந்தை தனுஸ்ரீயை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை தன்யஸ்ரீ உயிரிழந்தார். இது குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒன்றை வயது குழந்தை தன்யஸ்ரீ நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 480

0

1