இலங்கை தாதா மர்ம மரண வழக்கு : கைதான வழக்கறிஞரின் ஜாமீன் மனு தள்ளுபடி!!
24 August 2020, 1:12 pmகோவை : இலங்கை தாதா வழக்கில் கைது செய்யப்பட்ட வக்கீல் சிவகாம சுந்தரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் கடந்த ஜூலை மாதம் இலங்கை தாதா மற்றும் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கோடா லொக்கா மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் மறைமுகமாக கோவையில் தங்குவதற்கு போலி ஆவணங்கள் மூலம் அடையாள அட்டை தயாரித்து கொடுத்ததாக மதுரையை சேர்ந்த வக்கீல் சிவகாமசுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானேஷ்வரன் மற்றும் அவருடன் தங்கியிருந்த காதலி அமானி தாஞ்சி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கைதான 3 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து 3 பேரின் நீதிமன்ற காவல் வருகின்ற 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிவகாம சுந்தரி கோவை மத்திய சிறையிலும், தியானேஷ்வரன் பெருந்துறை கிளை சிறையிலும், அமானி தாஞ்சி சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சிபிசிஐடி போலீசார் சிலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி வக்கீல் சிவகாமசுந்தரி கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ஸ்ரீகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.