டீ குடித்ததற்கு பணம் கேட்ட டீ மாஸ்டர் மீது தாக்குதல் : மாமூல் கேட்டு ரகளையில் ஈடுபட்ட பிரபல ரவுடி… 5 பேரை கைது செய்த காவல்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2022, 5:49 pm
Tea Master Attacked - Updatenews360
Quick Share

சேலம் தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் ஸ்டாப் பகுதியில் டீக்கடை உள்ளது. இங்கு டீ மாஸ்டராக அப்துல் சுகூர் ( வயது 54) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு டீக்கடைக்கு வந்த சில நபர்கள் அவரிடம் சிகரெட் கேட்டனர்.

மேலும் அங்கிருந்த சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்து பற்ற வைத்து சிகரெட் புகையை அவர் மீது ஊதிவிட்டு அவரிடம் மாமூல் கேட்டு தகராறு செய்தனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த கும்பல் அப்துல் சுகூரை சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து அங்கிருந்த பிஸ்கட், பலகாரங்கள் வைத்திருந்த ஜாடிகளை அவர்கள் எடுத்து உடைத்து கடையை சூறையாடினர். இது குறித்து அப்துல் சுகூர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் ( வயது 22), சதீஷ்குமார் (வயது 21), ரஞ்சித் குமார் (வயது 25) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

இதில் ரஞ்சித் குமார் பிரபல ரவுடி ஆவார். இவர் கிச்சிப்பாளையம் பிரபல ரவுடி செல்லத்துரை கொலை வழக்கில் ஏற்கனவே கைதானவர் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 266

0

0