ஆவினில் அடுத்த சர்ச்சை… எடை குறைந்து விநியோகிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகள் ; ஆதாரத்தை வெளியிட்ட பால் முகவர்கள் சங்கம்!!

Author: Babu Lakshmanan
9 October 2023, 4:05 pm
Quick Share

சென்னையில் ஆவின் டிலைட் பால் பாக்கெட்டுகளில் எடை குறைந்து காணப்படுவதாக ஆதாரத்தை வெளியிட்டு பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- சென்னையில் உள்ள பால் முகவர்களுக்கு இன்று விநியோகம் செய்யப்பட்ட ஊதா நிற “ஆவின் டிலைட் பால்” பாக்கெட்டுகளில் பல பாக்கெட்டுகள் சுமார் 100 கிராம் எடை குறைவான அளவிலேயே வந்துள்ளதும், குறிப்பாக 516 முதல் 520 கிராம் வரை இருக்க வேண்டிய பால் பாக்கெட்டின் எடை 415 கிராம் என்கிற அளவில் இருப்பதும் கடும் அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னை, கோவை, வேலூர் மாவட்டங்களில் எடை அளவு குறைவான ஆவின் பால், தயிர் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் இனிமேல் அது போன்ற நிகழ்வுகள் நடக்காது என ஆவின் நிர்வாகம் உறுதியளித்திருந்தது. ஆனால் அந்த உறுதிமொழி தற்போது மீண்டும் காற்றில் பறக்க விடப்பட்டிருப்பதன் மூலம் நம்மை யார்.., என்ன செய்து விடுவார்கள்..? என்கிற ஆணவத்திலும், மெத்தனத்திலும் ஆவின் அதிகாரிகள் இருப்பதை உணர முடிகிறது.

4.5% கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டில் 1% கொழுப்பு சத்தை குறைத்து அதே விற்பனை விலைக்கு ஊதா நிற பாக்கெட்டில் செரிவூட்டப்பட்ட பசும்பால் எனக் கூறி மக்களை ஏமாற்றியதோடு மட்டுமில்லாமல், மறைமுகமாக லிட்டருக்கு 8.00 ரூபாய் விற்பனை விலையை உயர்த்தி மக்கள் தலையில் பாரத்தை சுமத்திய ஆவின் நிர்வாகம் தற்போது அடிக்கடி பால் பாக்கெட்டுகளின் எடையளவை குறைத்து நவீன முறையில் மோசடியில் ஈடுபட்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

மேலும், அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை செரிவூட்டுவதற்காக புரோட்டின், விட்டமின் உள்ளிட்ட எந்த ஒரு பொருளும் பாலில் சேர்க்கக் கூடாது என உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கடந்த வாரம் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வந்திருக்கிறது. அப்படியானால் ஆவினில் இதுவரை செரிவூட்டப்பட்ட பசும்பால் எனக் கூறி ஊதா நிற பாக்கெட்டில் விநியோகம் செய்யப்படும் பாலினை #FSSAI உத்தரவின்படி #ஆவின் நிர்வாகம் நிறுத்தப் போகிறதா..? இல்லை அதை மீறி தொடர்ந்து விநியோகம் செய்யப் போகிறதா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம், என தெரிவித்துள்ளார்.

Views: - 430

0

0