மக்கள் மாஸ்க் அணிவதை உறுதிபடுத்துக : சுகாதார ஆய்வாளர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

Author: Babu Lakshmanan
6 July 2022, 2:15 pm
Mask Fine -Updatenews360
Quick Share

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், மக்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை மாநகராட்சியிலுள்ள சுகாதார ஆய்வாளர்கள் கண்காணித்திட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுத்திடும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், உழவர் சந்தைகள், வாரச்சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும்.மாநகராட்சியில் உள்ள 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் நாள்தோறும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மேலும் 12 முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களுக்கும், 15 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டம், இரண்டாம் கட்டம் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் 9 மாதங்களுக்குப் பின்னர் மூன்றாம் கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இதனை மாநகராட்சியிலுள்ள சுகாதார ஆய்வாளர்கள் கண்காணித்திட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 507

0

0