தனியார் பள்ளியின் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி : பள்ளி தாளாளர் மீது கிளம்பிய புகார்… போலீசார் விசாரணை

Author: Babu Lakshmanan
6 July 2022, 3:38 pm
Quick Share

கரூர் அருகே தனியார் பள்ளி மாணவி 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூரை அடுத்த மண்மங்களம் அருகில் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் கிரீன் பார்க் நீட் கோசிங் செண்டர் செயல்பட்டு வருகிறது. இதில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்து ரயில்வே பீடர் ரோட்டில் வசிக்கும் வாசுமணியின் 17 வயது மகள் தர்ஷினி விடுதியில் தங்கி நீட் கோச்சிங் படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாணவி கழிவறைக்கு சென்ற போது தோழியிடம் பேசிக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனை விடுதி காப்பாளர்கள் பேபி, கோகிலா ஆகியோர் திட்டியுள்ளனர். மேலும், மாணவியின் தந்தையிடம் உங்கள் அதிகமாக பேசுகிறாள் என்றும், அதனால் வந்து அழைத்துச் செல்லும்படி பள்ளியின் தாளாளர் சுப்பிரமணி கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி நேற்று மதியம் 12.45 மணியளவில் பள்ளியின் 2 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இடது கால், தலை, வாய், காது ஆகிய இடங்களில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நிர்வாகம் சார்பில் கார் மூலம் தனியார் மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வாங்கல் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 618

0

0