இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதாக கூறி தம்பதியினரிடம் பணம் பறிப்பு! OLX மூலம் மோசடி!!
1 August 2020, 12:09 pmகோவை : இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதாகவும், இணையதளத்தில் கார் விற்பனை செய்வதாகவும் கூறி கோவை தம்பதியினரிடம் ரூ.1.5 லட்சம் மோடி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூரை அடுத்த சோமையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 38). இவர் அதே பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஓ.எல்.எக்ஸ் செயலியில் கார் ஒன்றை பார்த்துள்ளனர்.
அந்த காரின் உரிமையாளர் என்று கூறிக்கொண்ட நபர், தான் இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதாகவும், தற்போது பெங்களூரில் இருப்பதால் காரை விற்பனை செய்வதாகவும் அதன் விலை ரூ.2 லட்சம் என்றும் கூறியுள்ளார். மேலும், தான் ராணுவத்தில் பணியாற்றுவதற்கான ஐ.டி கார்டு ஆதாரங்களையும் அனுப்பியுள்ளார்.
ராணுவத்தில் வேலை செய்வதாக கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்த கண்ணன் தவணை முறையில் ரூ.1.50 லட்சத்தை அந்த நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இதை தொடர்ந்து அந்த நபர் காரையும் வழங்காமல், வாங்கிய பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். மனமுடைந்த கண்ணன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தொடர்ந்து, பணத்தை மீட்டுத்தரக் கோரி கண்ணனின் மனைவி கவிதா கோவை மாவட்ட கண்காணிபாளரிடம் புகார் அளித்தார். இது குறித்து கவிதா கூறுகையில், “வீட்டில் உள்ள நகைகளை விற்று பணம் அனுப்பினோம். ஆனால், தற்போது ஏமார்ந்து போய் நிற்கிறோம்.
இதுகுறித்து தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்த பொழுது அவர்கள் புகாரை ஏற்க மறுத்து எங்களை வெளியே துரத்தினர். எங்களது பணத்தை எப்படியாவது மீட்டு கொடுக்க வேண்டும் இவ்வாறு கவிதா கூறினார் .
முகம் தெரியாமல், வெறும் பொருளை வைத்து நூதன முறையில் OLX செயலி மூலம் பொருளை வாங்குவோர் கவனமின்றி செயல்பட்டால் எந்த மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணம்.