‘இனி நிறுவனங்களை இணையதளம் மூலம்தான் பதிவு செய்ய வேண்டும்’: தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு..!!
Author: Aarthi Sivakumar8 January 2022, 11:29 am
கோவை: கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் இனி இணையம் மூலமாக மட்டுமே தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலாளர் நலத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் நலத் துறையின் உதவி ஆணையர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் உணவு நிறுவனங்கள் தொழிலாளர் நலச்சட்டங்களின் கீழ் தங்கள் நிறுவனத்தினை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் மற்றும் தேசிய பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் ஒவ்வொறு ஆண்டும் தாக்கல் செய்யப்பட வேண்டிய ‘நமுணா V-யினை’ தற்பொழுது இணையதளம் (www.labour.tn.gov.in/services) மூலம் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதற்கான கட்டணங்களை இணையதளம் மூலமே செலுத்தப்பட வேண்டும். மேலும், அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர் நலச்சட்டங்களின் கீழ் தாக்கல் செய்யப்படும் ஆண்டறிக்கைகளை மேற்படி இணையதளம் மூலம் மட்டுமே தாக்கல் செய்யப்படவேண்டும்.
தொழில், உணவு, வணிக மற்றும் கடை நிறுவனங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்வார்கள். ஆய்வின் சமயம் முரண்பாடு கண்டறியும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலச்சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
0
0