3 பேரை அரிவாளால் வெட்டி கொள்ளையடித்த வழக்கு : கல்லூரி மாணவர்கள் உட்பட 9 பேர் கைது!!

14 September 2020, 3:38 pm
sathy Crime - updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே தனியாக உள்ள வனத்துறை ஊழியர் வீட்டில் புகுந்து, அரிவாளால் வெட்டி விட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம், செங்குந்தர் நகரில், சத்தியமங்கலம் வனச்சரக ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் சஜீவ் (வயது40). இவர் தனது மனைவி ரீனா, மகன் சூரஜ், மகள் ஸ்ரீனிகா ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இவரது மேல் வீட்டில் பாலு என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஒதுக்குபுறமாக ஒருவரது வீடு மட்டுமே உள்ள செங்குந்தர் நகரில், கடந்த 8-ம் தேதி இவரது வீட்டிற்குள் சுமார் 9 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்தபடி புகுந்து முதலில் ரீனாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதனை தடுக்க வந்த வனத்துறை ஓட்டுனர் சஜீவ் மற்றும் பாலு ஆகியோரையும் வெட்டி விட்டு, வீட்டில் பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து உள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் கூக்குரல் எழுப்பியதில் பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்கள் வரவே, அங்கிருந்த மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர். வனத்துறை ஓட்டுனர் சஜ்ஜி, அவரது மனைவி ரீனா, மேல் வீட்டில் குடியிருக்கும் பாலு ஆகியோரை அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் நான்கு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த கூட்டுக் கொள்ளையை தலைமையேற்று நடத்திய சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்த பிரகாஷ் (வயது 25), தவேந்திரன் (வயது 18), திம்மையன்புதூரை சேர்ந்த தனுஷ் (வயது 19), சௌடேஸ்வரன் (வயது 19), அருள்தாஸ் (வயது 19), புவனேஸ்வரன் (வயது 19), ஸ்ரீநாத் (வயது 19), மகேந்திரன் (வயது 48), முத்து (வயது 34) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

குற்றத்தை ஒப்புக்கொண்டவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒன்பது பேரில் ஆறு நபர்கள் ஐ.டி.ஐ படிக்கும் கல்லூரி மாணவர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், இரும்புக்கம்பி, மூன்று இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Views: - 0

0

0