தள்ளு… தள்ளு.. தள்ளு… பழுதடைந்த அரசுப் பேருந்து ; முடியாமல் தள்ளிய நடத்துநர்… பயணிகளின் உதவியால் தள்ளி ஸ்டார்ட் செய்த அவலம்..!!

Author: Babu Lakshmanan
22 December 2022, 3:59 pm
Quick Share

திண்டுக்கல் ; அரசு பேருந்து பழுதடைந்ததால் நடத்துனர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தள்ளி ஸ்டார்ட் செய்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசுப் பேருந்துகளின் நிலை படுமோசமாக இருப்பதாக அடுத்தடுத்து குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. அரசுப் பேருந்துகளுக்கு மழை பெய்வது, படிக்கட்டு இல்லாதது உள்பட பிரச்சனைகளுடன் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பழுதடைந்த அரசுப் பேருந்தை நடத்துநர் மற்றும் பொதுமக்கள் தள்ளி ஸ்டார்ட் செய்த சம்பவம் மேலும் விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையத்திற்கு திண்டுக்கல்லில் இருந்து கோவிலூர் வழியாக அரசு பேருந்து தினம்தோறும் வருகின்றது. பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள், வேடசந்தூர் பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள் அதிகளவில் இந்தப் பேருந்தில் பயணிக்கின்றனர்.

இந்நிலையில், இன்றும் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வேடசந்தூர் பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்தது. பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கி விட்டு விட்டு மீண்டும் கோவிலூர் வழியாக செல்வதற்கு பேருந்தை ஓட்டுநர் இயக்கிய போது, பேருந்து ஸ்டார்ட் ஆகவில்லை.

தொடர்ந்து, ஓட்டுநர் இயக்கிய போதும் பேருந்து இயங்காதால், அரசு பேருந்து நடத்துனர் மற்றும் பேருந்தில் காத்திருந்த பயணிகள் உதவியுடன் பேருந்தை தள்ளினர். இதனால், சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பழுதான அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக பொதுமக்களால் தொடர்ந்து குற்றம் சாட்டு வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குமுளிக்கு சென்ற அரசு பேருந்து முற்றிலும் பழுதானதால் நடத்துனர் ஓட்டுனர் இடம் பயணிகள் சண்டை போட்டு தகராறில் ஈடுபட்டனர்.

எனவே, பழுதான பேருந்துகளுக்கு பதிலாக, தரமான பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 458

0

0