மி.மீ அளவு பெய்த மழைக்கே தாக்கு பிடிக்காத படப்பை ஊராட்சி… மழைக்காலத்தை எப்படி சமாளிக்க போகிறதோ..? சமூக ஆர்வலர்கள் வேதனை..!!

Author: Babu Lakshmanan
23 August 2023, 4:39 pm
Quick Share

மில்லி மீட்டர் அளவுக்கு பெய்த மழையையே தாங்க முடியாத படப்பை ஊராட்சி மழைக்காலத்தை எப்படி சமாளிக்க போகின்றது என்ற கேள்வி எழுப்பியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர் வாலாஜாபாத் 6 வழி சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கனரக வாகனங்களும், கார்களும் நாள்தோறும் சென்று வருகிறது.
சென்னையின் புறநகர் பகுதியாகவும் விளங்கும் படப்பை ஊராட்சியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் வண்டலூர் நெடுஞ்சாலையில் படப்பை அருகே பாலம் கட்டும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. பாலம் கட்டும் பணி மெத்தனமாக நடைபெற்று வருவதால், தினந்தோறும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடனே பயணம் செலுத்துகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு மில்லி மீட்டர் அளவிலேயே பெய்த சிறிதளவு மழையின் காரணமாக படப்பை கடைவீதியில் இருந்து தாம்பரம் மார்க்கமாக சுமார் 150 மீட்டர் தூரம் வரை நெடுஞ்சாலையில் மழை தண்ணீர் தேங்கி வெளியேற வழி இல்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த சாலை வழியே வண்டலூர் செங்கல்பட்டு, திருச்சி, தாம்பரம், சென்னை மார்க்கமாக செல்லுகின்ற அனைத்து வாகனங்களும் இந்த தேங்கி நிற்கும் மழை நீரில் நீந்தியபடியே செல்கின்ற அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த சாலை வழியே கனரக வாகனங்கள் செல்லும்போது, பாதசாரிகள், இருசக்கர வானத்தில் செல்பவர்கள் ,சுப நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் என அனைவர் மீதும் சாலையில் தேங்கியுள்ள தண்ணீர் உடைகளின் மீது பட்டு அவர்கள் மன சஞ்சலத்துக்கு ஆளாகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக உள்ள, திமுக கட்சியை சேர்ந்த படப்பை மனோகரனின் வீடும் படப்பை நகரில் தான் உள்ளது. தேங்கியுள்ள மழை தண்ணீரில் மக்கள் கடும் சிரமத்துடன் பயணம் செய்வதை படப்பை மனோகரன் கண்டும் காணாமலும் இருப்பது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.

மேலும் சாலையின் நடுவில் அங்கங்கே பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்பதால் மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடியவர்கள் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். அது மட்டுமல்லாமல் தண்ணீர் வெளியேறும் கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் தண்ணீர் வெளியேற வழி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட நிர்வாகம் மற்றும் படப்பை பேரூராட்சி நிர்வாகம் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மில்லி மீட்டர் அளவே பெய்த மழையின் காரணமாக படப்பை பஜாரில் அரைஅடி தண்ணீர் சாலைகளில் தேங்கியுள்ளது . வருகின்ற மழைக்காலத்தில் இது போன்ற பிரச்சனையை ஊராட்சி நிர்வாகம் எப்படி சமாளிக்க போகின்றார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Views: - 335

0

0