மகாலிங்கசுவாமி திருக்கோயிலில் கோலாகல தேரோட்டம்.. ‘மகாலிங்கா, இடைமருதா’ முழக்கத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்..!!

Author: Babu Lakshmanan
18 January 2022, 11:58 am
Quick Share

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பெருநலமாமுலையம்மை சமேத மகாலிங்கசுவாமி திருக்கோயிலின் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பெருநலமாமுலையம்மை சமேத மகாலிங்கசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து சென்ற பின்னர் தான், பிரமஹத்தி தோஷம் நீங்க பெற்றான். இத்தலத்தில் 27 நட்சத்திரங்களுக்கும், 27 லிங்கங்கள் தனி தனியே அமைந்துள்ளது. இது காசிக்கு நிகரான தலமாகும் என வரலாறு கூறுகிறது. இத்தலத்தை பட்டினத்தார், அருணகிரிநாதர், சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட பல சமயப்புலவர்கள் பாடியுள்ளனர். பத்திரகிரியார் முத்தி பெற்ற தலமாகும்.

இத்தகைய சிறப்பு பெற்ற தலத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைப்பெறும். அதுபோல, இவ்வாண்டும் இவ்விழா கடந்த 09ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும், அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பல்வேறு வாகனங்களில் பிரகாரஉலா மட்டும் நடைபெற்றது.

9ம் நாளான இன்று நடைபெற்ற ஐந்து தேர்களின் தேரோட்டத்தை முன்னிட்டு, விநாயகர், வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான், மகாலிங்கசுவாமி, பெருநலமாமுலையம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் என ஐவரும், ஐந்து தனித்தனி தேர்களில் எழுந்தருள, திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூர்யனார்கோயில் ஆதீன குருமகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை எம்பி செ இராமலிங்கம் ஆகியோர் இணைந்து வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

முதலில், விநாயகர் மற்றும் முருகன் திருத்தேரோட்டமும் தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரசுவாமி தேரோட்டமும் கூடியிருந்த ஆயிரக்கணக்காண பக்தர்கள் பக்தி பெருக்குடன், மகாலிங்கா, இடைமருதா என முழக்கமிட்டபடி, ஐந்து தேர்களை வடம் பிடித்து இழுத்தும், தனித்தனி தேர்களில் உலா வந்த சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்.

Views: - 207

0

0