கொடைக்கானலில் பரவும் காட்டுத்தீ…தீயை அணைக்க பலமணி நேரம் போராட்டம்: அணைக்க முடியாமல் திணறல்..!!

Author: Rajesh
11 March 2022, 8:17 pm
Quick Share

திண்டுக்கல்: கொடைக்கானலில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயை அணைக்க பல மணி நேரமாக போராடி வருகின்றனர்.

கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், இரவில் அதிகமான பனி நிலவி வருகிறது. இதனால் நீரோடைகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. மேலும் வனப் பகுதிகளிலுள்ள மரங்கள், புற்கள், இலைகள், சருகுகள் காய்ந்த நிலையில் உள்ளது.

இதனால் எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் வனப்பகுதியையொட்டியுள்ள விவசாய நிலங்களில் விவசாயிகள் தற்போது தங்களது நிலத்தை சுத்தப்படுத்துவதற்காக தீ வைத்து தோட்டங்களிலுள்ள காயந்த பொருட்களை எரிப்பது வழக்கம்.

அப்போது தீயானது பரவி அருகிலுள்ள வனப்பகுதிகளில் விழுந்து தீபிடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பெருமாள்மலை,பேத்துப் பாறை,வெள்ளப் பாறை, வில்பட்டி வரைப்பகுதி, மச்சூர் வனப்பகுதி உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத் தீ எரிந்து வருகிறது.

இதனால் வனப்பகுதிகளிலுள்ள அரிய வகை மூலிகைகள், தோதகத்தி, மலை வேம்பு உள்ளிட்ட மரங்கள் எரிந்து கருகி வருகிறது. மேலும் வனப் பகுதிகளிலுள்ள வன விலங்குகள் தீயின் தாக்கத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு இடம் பெறுகிறது.

இதனால் குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகள் புகும் அபாயம் இருப்பதால் பொது மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதியில் எரிந்து வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 760

0

0