பருத்தியை இறக்குமதி செய்யாவிட்டால் கொங்கு மண்டலத்தில் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் : சைமா எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2022, 4:37 pm
SIIMA Warn - Updatenews360
Quick Share

கோவை: பஞ்சு விலை உயர்வால் ஜவுளித்துறை நஷ்டமடைந்து வருவதாகவும், 40 லட்சம் பேல் பஞ்சை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையேல் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தினர் (சைமா) தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் சைமா சங்கத்தின் தலைவர் ரவி சாம் மற்றும் பொதுச்செயலாளர் செல்வராஜூ செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, பஞ்சு விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதின் காரணமாக, நடப்பாண்டில் பஞ்சு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. நடப்பாண்டில் பருத்தி விளைச்சல் 34O லட்சம் முதல் 350 லட்சம் பேல்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர் மழை காரணமாக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதனை எதிர்கொள்ளும் வகையில் உடனடியாக 11 சதவீதமாக உள்ள பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்துவிட்டு, 40 லட்சம் பேல்களை இறக்குமதி செய்து கையிருப்பில் வைக்க வேண்டும்.

கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் பஞ்சாலைகளின் நலன்களை கருத்தில் கொண்டு இ.எல்.எஸ் எனப்படும் செயற்கை இழை பஞ்சுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உக்ரேன் – ரஷ்யா போர் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர வாய்ப்புள்ள நிலையில், கொரோனா காலத்திற்கு பிறகு சற்றே நிமிர்ந்து வரும் தொழில்துறையினரை பாதுகாக்க அரசு இந்த இறக்குமதி வரியை ஒரு முறை மட்டுமேனும் ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் சுமார் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள், தறி உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கடுமையான பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Views: - 228

0

0