அமைச்சரின் பெயரை சொல்லி பணம் பறித்த ஆசாமி… செல்போன் எண்ணை வைத்து மடக்கிப்பிடித்த போலீஸ்.!!
Author: Babu Lakshmanan29 January 2022, 11:12 am
புதுச்சேரி அமைச்சரின் பெயரை சொல்லி பணம் பறிக்க முயன்ற சென்னையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி நகர பகுதியில் கடந்த சில நாட்களாக வர்த்தக நிறுவனங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர் தான் அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகிறேன், போஸ்டர் அமைக்க இவ்வளவு தேவைப்படுகிறது, இப்பணத்தை இந்த வங்கி கணக்கிற்கு அனுப்பிவிடுங்கள் என கூறி வந்தார். சந்தேகமடைந்த வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் இது குறித்து அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, உடனடியாக அமைச்சர் லட்சுமிநாராயணன் முத்தியால்பேட்டையை சேர்ந்த தனது உதவியாளர் சீனிவாசன் மூலம் பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார், அழைப்பு வந்த மொபைல் எண்ணை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த முகமது ரபிக் (51) என்ற நபர் தான் அமைச்சர் பெயரில் பணம் பறிக்க முயன்றது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவரை சென்னை சென்று கைது செய்து, புதுச்சேரி அழைத்து வந்த போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையில் புதுச்சேரி அமைச்சரின் பெயரை சொல்லி பணம் பறிக்க முயன்றதை ஒப்புக்கொண்டார். கைது செய்யப்பட்ட முகமது ரபிக்கை நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் பெரியக்கடை போலீசார் அடைத்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட முகமது ரபிக், புது சிம்கார்டு வாங்கி, ட்ரூ காலரில் பிரபல அரசியல் வாதிகளின் பெயரை பதிவு செய்து, அவர்களை போன்று மொபைல்போனில் பேசி, பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பதும், கடந்த 2014 ஆண்டு முதல் இதுபோன்ற மோசடி செய்து பணம் பறிக்க முயன்றதாக, தமிழகத்தில் அவர் மீது எட்டு வழக்குகள் பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் முதல் முறையாக பணம் பறிக்க முயன்றபோதே முகமது ரபிக் சிக்கிவிட்டார். அமைச்சர் பெயரில் பணம் பறிக்க முயன்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
0
0