தொடங்கியது தைப்பூச திருவிழா… இன்று நடக்கும் தேரோட்டம்… பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!!

Author: Babu Lakshmanan
4 February 2023, 9:02 am
Quick Share

தைப்பூச தேரோட்டத்தை முன்னிட்டு பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 29ம் தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு அவதாரங்களில் தண்டாயுதபாணி சுவாமி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அந்தவகையில், நேற்று தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக திண்டுக்கல், தாராபுரம், உடுமலை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரையாக பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறு வந்த பக்தர்கள் சண்முகநதி, இடும்பன்குளத்தில் புனித நீராடிய பின் திருஆவினன்குடி, மலைக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் பழனி அடிவாரம், சன்னதி ரோடு, அய்யம்புள்ளி ரோடு, கிரிவீதிகள் ஆகிய பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.

கோவிலை சுற்றி எங்கு பார்த்தாலும் பக்தர்கள் மேள, தாளத்துடன் ஆங்காங்கே கோலாட்டம், கலில், ஒயில் ஆகிய பாரம்பரிய ஆட்டம் ஆடியபடி சென்றனர். மேலும் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வந்தனர்.

பழனி தைப்பூச திருவிழாவில் இன்று தேரோட்டம் நடைபெறுவதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால், பக்தர்களுக்கான வசதிகள் கோவில் மற்றும் அனைத்து துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. பழனிக்கு வந்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

சின்னாரக்கவுண்டன்வலசு பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கோவை, திருச்சி, மதுரை, தேனி என புறநகர் செல்லும் பஸ்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Views: - 464

0

0