பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் தகராறு : கோட்டாட்சியரின் முன்பு இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு..!

Author: Babu Lakshmanan
19 August 2022, 9:33 am
Quick Share

பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் இரு தரப்பினர் கிடையே தகராறு பேச்சுவார்த்தைக்கு வந்த இடத்தில் கோட்டாட்சியரின் முன்பாகவே தள்ளுமுள்ளு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பழவேற்காடு அடுத்த கோட்டை குப்பம், நடுவூர் மாதா குப்பம், ஆண்டிக் குப்பம், பெரிய மாங்கோடு, சின்ன மாங்கோடு, புது குப்பம், அண்ணாமலைச்சேரி குப்பம், அவுரிவாக்கம் மேல் குப்பம், அவுரிவாக்கம் கீழ் குப்பம் ஆகிய கிராம மக்கள், பூர்வீகமாக பழவேற்காடு ஏரியில் மீன் பிடி தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில் கடலில் மீன்பிடி தொழில் செய்யும் கூனங்குப்பம் கிராமத்தினர், 10 கிராம மீனவர்களுக்கு உரிமையான பாட்டில் (பாடு) கடல் வலைகளான இறால் வலை, நண்டு வலைகளை விட்டு தொழில் செய்வதாகவும், இது சம்பந்தமாக கடந்த ஜூன் மாதம் மீன்வளத்துறையில் அதிகாரிகளிடம் மீனவ கிராம மக்கள் மனு கொடுத்ததாகவும், ஆனால் இது வரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில், பிரச்சனைக்கு தீர்வு காண பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முதல்கட்ட பேச்சு வார்த்தையில் மீனவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ரகளை ஏற்பட்டது.

நேற்று இரண்டாவது கட்ட பேச்சு வார்த்தை கோட்டாட்சியர் காயத்ரி, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் ஈடுபட்டதால், இரு தரப்பினரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து, மீனவர்கள் அங்கிருந்து சென்றனர்.

சட்ட மன்ற உறுப்பினர், கோட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் மீனவர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 434

0

0