தனியார் பாரில் மதுபாட்டிலால் அடித்து கூலித்தொழிலாளி கொலை… தலைமறைவான இருவரை தேடும் போலீசார்..!!

Author: Babu Lakshmanan
10 March 2022, 12:46 pm
Quick Share

விருதுநகரில் தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் மதுபாட்டிலால் குத்தி ராமர் என்பவர் கொலை செய்த சம்பவத்தில் இருவரை சூலக்கரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள இனாம் ரெட்டியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. அவரது மகன் ராமர் (35). இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஒட்டி வருகிறார். மேலும் அதே கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மற்றும் சிங்கம் (எ) ராஜேஸ்வரன் ஆகிய மூன்று பேரும் விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையில் உள்ள தனியார் பாரில் தனித்தனியாக மது அருந்தி உள்ளனர்.

அப்போது ராமரிடம் கருப்பசாமி மற்றும் சிங்கம் (எ) ராஜேஸ்வரன் ஆகிய இருவரும் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் மூன்று பேருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தகராறில் ஈடுபட்ட மூன்று பேரையும் தனியார் மதுபான பாரின் ஊழியர்கள் சமாதானம் செய்ய முயன்று உள்ளனர். அப்போது, கருப்பசாமி மற்றும் சிங்கம் (எ) ராஜேஸ்வரன் ஆகிய இருவரும் மதுபாட்டிலை வைத்து ராமரை பலமாக தாக்கி உள்ளனர். இதனால், பலத்த காயம் அடைந்த ராமர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ராமரை கொலை செய்த கருப்பசாமி மற்றும் சிங்கம் (எ) ராஜேஸ்வரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தலைமறைவானார்கள். இந்த கொலை சம்பவம் குறித்து தனியார் மதுபான கூடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சூலக்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த சூலக்கரை போலீசார் ராமரின் உடலை கைப்பற்றி, விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த சூலக்கரை போலீசார் தப்பியோடிய கொலையாளிகள் இரண்டு பேரை வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே ராமருக்கும் சிங்கம் (எ) ராஜேஸ்வரன் இடையே ஆட்டோ ஓட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதா..? இல்லை மதுபோதையில் எற்பட்ட தகராறில் கொலை நடந்ததா..? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். தனியார் மதுபான கூடத்தில் நடைபெற்ற கொலை சம்பவம் விருதநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 414

0

0