ஆவின் நிறுவனத்தில் தீடீரென அமோனியா வாயு கசிவு… 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிப்பு ; பால் கெட்டுப்போகும் அபாயம்..!!

Author: Babu Lakshmanan
29 June 2023, 5:16 pm
Quick Share

புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் திடீரென்று அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகரணம் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் உள்ளது. இங்கிருந்து தினந்தோறும் விவசாயிகளிடமிருந்து 60 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, பால் பலப்படுத்தப்பட்டு குளிரூட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட தேவைக்கு மட்டுமல்லாமல், இங்கிருந்து சென்னைக்கு அனுப்பப்படுகிறது.

இது தவிர ஆவின் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் பால்கோவா உள்ளிட்ட இனிப்பு வகைகளும் இங்கு தயாரிக்கப்படுகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இன்று மதியம் வழக்கம் போல் விவசாயிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பால் பலப்படுத்தப்பட்டு குளிரூட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, பால் குளிரூட்டும் குழாயில் திடீரென்று அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.

இதனால் மூச்சடைப்பு ஏற்பட்டு 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அவசர அவசரமாக அலறி அடித்து அங்கிருந்து வெளியேறினர். இதனை தொடர்ந்து, உயர் அதிகாரிகள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாதுகாப்பு கலசங்களை அணிந்து, அமோனியா வாயு கசிவை சரி செய்தனர்.

இந்த வாயுவை சுவாசித்தால் நுரையீரல் கோளாறு ஏற்படும் என்றும், மூச்சடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும் என்றும், தீயணைப்புத் துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால், பொதுமக்கள் பதட்டம் அடைந்துள்ளனர். அந்த சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரை கிலோமீட்டர் தூரத்திற்கு அமோனியா வாயு உணரப்பட்டு வருகிறது. மேலும், தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக அமோனியா வாயுக் கசிறை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அமோனியா வாயு பசுவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு வீரர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, அவர்கள் உடனடியாக வெளியேறினர்.

அமோனியா வாயு கசிவை சரி செய்யா விட்டால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் தீயணைப்பு துறையினர் தெரிவிக்கின்றனர். எனவே, ஆவின் நிறுவன அதிகாரிகள் ஒத்துழைப்பில் தீயணைப்பு வீரர்கள், தற்போது அமோனியா கசிவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கசிவு ஏற்படும்போது பணியில் இருந்த பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தால் தான் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரம் தெரியவரும். இதனால் பரபரப்பான சூழ்நிலை தற்போது அங்கு நிலவி வருகிறது.

இன்று மாலைக்குள் சரி செய்யப்படா விட்டால், இங்கு வருகை தரும் பால் கெடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Views: - 447

0

0