நிமிடத்திற்கு நிமிடம் கண்காணிக்கப்படுகிறது ‘புரெவி’ புயல்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்…!!

2 December 2020, 11:13 am
rb udhaykumar - updatenews360
Quick Share

மதுரை: புரெவி புயல் நிமிடத்திற்கு நிமிடம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மதுரையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது, புரெவி புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்க கடலில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. கன்னியாகுமரிக்கு 700 கி.மீ தொலைவில் புரெவி புயல் கடலில் மையம் கொண்டுள்ளதால், தமிழகத்தில் சில இடங்களில் 75 முதல் 95 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புரெவி புயல் கன்னியாகுமரி – பாம்பனுக்கு இடையே கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதால், தென் தமிழகத்தில் கன மழை மற்றும் மிகுந்த கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து உபரி நீர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி புரெவி புயல் நிமிடத்திற்கு நிமிடம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மதுரையில் 300 இடங்களில் மழை நீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், புரெவி புயலை எதிர்க்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது. தமிழக அரசு எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், புயல்கள் வருவதற்கு முன்னரே முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

புயலால் உயிர் மற்றும் பொருட்கள் சேதம் இல்லாமல் புயலை எதிர்க்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஜா புயலில் 1 இலட்சம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். நிவர் புயலில் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர். 1,295 கோடி ரூபாய் மதிப்பில் முல்லை பெரியாற்றில் இருந்து குடிநீர் திட்டத்தை டிசம்பர் 4ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். இந்த புதிய திட்டத்தால் 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை மதுரைக்கு 3 ஆண்டுகளில் முதலமைச்சர் வழங்கி உள்ளார். புரெவி புயலின் வீரியத்தை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. புயலின் நிலையை கண்காணித்த பிறகு தான் விடுமுறை குறித்த அறிவிப்பு கொடுக்க முடியும்.

திமுகவில் ஒரு பூகம்பம் உருவாகும், பூகம்பம் வலு பெருமா வழு பெறாத என தெரியவில்லை, மதுரையில் மையம் கொண்டுள்ள மு.க.அழகிரி என்கிற புயலால் திமுகவுக்கு பாதிப்பு உண்டாகும் என மக்கள் பேசுகிறார்கள். திமுக ஆட்சி காலத்தில் கட்ட பஞ்சாயத்து, ரவுடியிசம் இருந்தது, 2021 ல் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க மக்கள் முன் வந்துள்ளனர், புயல் வரும்போது முதல்வர் சூறாவளியாக சுழன்று நடவடிக்கைகள் எடுத்தார். கொரோனா காலகட்டத்தில் திமுகவினர் களத்திற்கு வரவில்லை, கொரோனா காலகட்டத்தில் திமுகவினர் எங்கே சென்றார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Views: - 22

0

0