ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை; விசாரணை நவ.14-க்கு ஒத்திவைப்பு..!

Author: Vignesh
7 November 2022, 3:33 pm
ramajeyam death - updatenews360
Quick Share

திருச்சி: உண்மை கண்டறியும் சோதனை நடத்த ராமஜெயம் கொலை வழக்கில் 9 ரவுடிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 14ந் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி தொழிலதிபர் கே.என். ராமஜெயம். இவர் 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி, திருச்சியில் நடைப்பயிற்சி சென்ற போது கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.

அவரின் உடல் திருச்சி – கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கினை உள்ளூர் போலீசார் முதலில் விசாரித்தனர்.

பின்னர் சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
இருப்பினும் எந்த துப்பும் துலங்கவில்லை. அதைத்தொடர்ந்து ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன், ‘இவ்வழக்கை தமிழக அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரிக்க வேண்டும்’ என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமீபத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், டி.எஸ்.பி. மதன்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ramajeyam death - updatenews360

இந்நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் 20 பேரிடம் விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் அதில் 12 பேரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டது.

பின்னர் சாமி ரவி, திண்டுக்கல் மோகன்ராம்,நரைமுடி கணேசன், மாரிமுத்து, சீர்காழி சத்யராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்போவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், கலைவாணன் ஆகிய 13 ரவுடிகளுக்கு திருச்சி கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.இந்த வழக்கு கடந்த 13ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது நீதிபதி விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகி அனுமதி கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து, இன்று கடலூர் லெப்ட் செந்தில், திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், திண்டுக்கல் தினேஷ் ஆகிய 4 ரவுடிகள் தவிர்த்து மீதமுள்ள
9 ரவுடிகளும், திருச்சி 6 வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று ஆஜராகினர்.

விசாரணை அதிகாரியும் எஸ்.பி.யுமான ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக மேற்கண்ட ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி தருமாறு மனு தாக்கல் செய்தார். அதில் வழக்கு விசாரணையின் போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நம்ப தகுந்த, ஆனால் உறுதி செய்யப்படாத தகவலின் அடிப்படையில் மேற்கண்ட, 13 ரவுடிகள் மீது விசாரணை நடத்த வேண்டியுள்ளது மனுவில் தெரிவித்து இருந்தார்.

மேலும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ரவுடிகள் அனைவரும் ஒப்புக்கொண்டு, கையெழுத்திட்டு தந்திருப்பதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ramajeyam death - updatenews360

இதற்கிடையே ரவுடிகள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் உண்மை கண்டறியும் சோதனை மருத்துவர்கள் மற்றும் வக்கீல்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவக்குமார் மனுவை ஏற்றுக் கொண்டு வழக்கு விசாரணையை வருகிற 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் ரவுடிகள் தரப்பில் ஆட்சேபனை மனுக்கள் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின்னர் நடைபெறும் வாதங்களின் அடிப்படையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு நீதிபதி அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 286

0

0