கோவையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்..மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்: போராட்டத்தில் ஈடுபட்ட 125 பேர் கைது..!!

Author: Rajesh
28 March 2022, 12:29 pm
Quick Share

கோவை: மத்திய அரசை கண்டித்து கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டம் நடத்திய அனைத்து தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்றும் நாளையும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு ஐ.என்.டி.யூ.சி சண்முகம் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் ஒன்றிய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை குறைத்து அனைத்து பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த சாலை மறியலில் எல்.பி.எப் சார்பில் ரத்தினவேல், ஏஐடியுசி சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம், ஐஎன்டியூசி செல்லகுட்டி, சிஐடியு பத்மநாபன், எம்எல்எப் தியாகராசன், ஏஐசிசிடியூ சார்பில் தாமோதரன், எஸ்டிடியூ சார்பில் ரகுபு நிஷ்தார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அப்போது முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் கூறுகையில், “நாடு தழுவிய இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி, காப்பீட்டு துறை, பி.எஸ்.என்.எல் மற்றும் போக்குவரத்து துறைகள் கலந்து கொண்டுள்ளன. அரசு போக்குவரத்து கழகத்தில் 95 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகாணும் விதமாக ஒன்றிய அரசு பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்க விடமாட்டோம். கோரிக்கைகளை வலியுறுத்தி நாளையும் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.” என்றார்.

தொடர்ந்து சாலைமறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 125 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Views: - 810

0

0